‘ ’கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே ‘’
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் அதிக சீட் ஒதுக்கக்கோரியும், அதிகாரத்தில் பங்கு கேட்டும் பிரளயம் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சி, திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் அமைச்சர் பதவிகள் கோரி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் போன்றோர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறி வருகின்றனர்.
2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்ற காங்கிரஸ், இம்முறை 38 முதல் 50 தொகுதிகள் வரை கேட்கிறது. அத்துடன் 3 அமைச்சர் பதவிகள், மாநிலங்களவை சீட்டு ஒதுக்கக்கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். கூட்டணி அரசியலில் காங்கிரஸ் தியாகம் செய்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆட்சியில் பங்கு தேவை, விஜயின் தவெக ஆட்சியில் பங்கு கொடுக்கத் தயார் என்று கூறி திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது காங்கிரஸ்.

திமுக தலைமையும்ம் மு.க.ஸ்டாலினும் ஆட்சியில் பங்கு கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக மறுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வேலை இல்லை என திமுக அடியோடு மறுத்து வருகிறது. வேண்டுமானால் தொகுதி பங்கீட்டில் கூடுதலாக 3-5 தொகுதிகள் கொடுக்கலாம். ஆனால், அமைச்சர் பதவி கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது திமுக தலைமை.
தற்போதைய நிலையில் கூட்டணி தொடர்வது உறுதி என்றும் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை, அது வதந்தி. திமுகவுடன் தான் கூட்டணி என தெளிவுபடுத்தியுள்ளார் கிரிஷ் சோடங்கர். பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் திமுகவை விமர்சித்து இருந்தாலும், கூட்டணி உடைய வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் "ஆட்சி அதிகாரப் பகிர்வு பற்றி பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று ட்வீட் செய்து மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘யாருக்கு வாக்கு?” – IPDS தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால், கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே !
இது வெறும் இடங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான நேரம் மட்டுமல்ல, அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான நேரமும் கூட’’ எனப்பதிவிட்டுள்ளார். இது தேர்தல் பேரம் பேசும் உத்தி என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. திமுக வலுவான நிலையில் இருப்பதால், காங்கிரஸ் கோரிக்கை பெரிதாக ஏற்கப்பட வாய்ப்பில்லை. கூட்டணி தொடரும் என்றே தெரிகிறது.

