அரசு பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிட்ட தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசுப்பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க அரசு உத்தரவிட்டு இருந்தது. அதாவது மாணவர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளதா? மாணவர்களின் தாய், தந்தை சிறையில் உள்ளார்களா? அவர்கள் அதிகளா? என்பது உள்ளிட்ட மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்கும்படி தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டு இருந்தது.
தமிழக அரசின் அறிவிப்பாணை அதிரடி ரத்து
மதுரை அமீர் ஆலம் என்பவர் இந்த அறிவிப்பாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அரசிடம் கேள்வி கேட்ட நீதிபதிகள்
மாதிரி பள்ளி எனக்கூறிக் இந்த தகவல்களை ஏன் கேட்கிறீர்கள்? இதை வைத்து என்ன செய்வீர்கள்? என்று நீதிபதிகள் தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேட்டனர். அதற்கு அவர், 'இத்தகையை பின்னணியில் உள்ள மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்' என்று கூறினார். அதற்கு நீதிபதிகள் சிறப்பு கவனம் என்னவென்று அரசு கூறவில்லை எனக்கூறி அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டனர்.
மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும்
தொடர்ந்து அரசின் அறிவிப்பாணை உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மீறுவதாக உள்ளது. இந்த தகவல்கள் இளம் மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும். மாணவர்களின் தகவல்கள் உணவுப்பூர்வமானவை. அவற்றை சேகரிப்பது மாணவர்களின் உரிமையை பாதிக்கும். இதுபோன்று தனியார் பள்ளிகளில் இதுபோல் கேட்க துணிவு உள்ளதா? இதுபோன்ற பின்னணி உடைய மாணவர்களின் தகவல்களை சேகரிப்பது அவர்களுக்கு மனச்சோர்வு உண்டாக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


