தமிழ்நாடு அளிக்கும் 1 ரூபாய்க்கு 29 பைசா தரும் மத்திய அரசு: சென்னையில் பேனர்!
தமிழ்நாடு அளிக்கும் 1 ரூபாய்க்கு மத்திய அரசு 29 பைசா திருப்பி அளிப்பதாக சென்னை முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. அதில், திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்வி மூலம், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மத்திய அரசுக்கு தமிழ்நாடு கொடுக்கும் 1 ரூபாய்க்கு, 26 பைசா திருப்பி அளிக்கப்படுவதாகவும், அதுவே, உத்தரப் பிரதேசத்துக்கு 2.2 ரூபாய், மத்திய பிரதேசத்துக்கு 1.70 ரூபாய் திருப்பி அளிக்கப்படுவதாகவும் திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
அதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகள் (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டியைத் தவிர்த்து) ரூ.22,26,983.39 கோடி. அதே காலக்கட்டத்தில் உத்திரப் பிரதேசத்தில் வசூலிக்கப்பட்ட வரி ரூ.3,41,817.60 கோடியாகும்.
அதுவே, கடந்த 5 ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கிய வரிப் பகிர்வுத் தொகை ரூ.6,42,295.05 கோடி. அதுவே, கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டும் விடுவிக்கப்பட்ட வரிப் பகிர்வுத் தொகை சுமார் ரூ.6,91,375.12 லட்சம் கோடி எனவும் திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்வி மூலம் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தமிழகத்தில் தேர்தல் பிரசாரமாக முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அளிக்கும் 1 ரூபாய்க்கு மத்திய அரசு 29 பைசா திருப்பி அளிப்பதாக கோயம்பேடு உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
திமுக ஆதரவாக செயல்பட்ட தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்! ஆக்ஷனில் இறங்கிய விஜய்.!
முன்னதாக, எங்கள் வரிப்பணம் எங்கே என கேட்டு சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில், ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக் காட்டும் வகையில், முட்டை படம் இடம்பெற்றிருந்தது. மேலும், எங்கள் வரிப்பணம் எங்கே என்று கேட்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதற்கு அருகில், திரைப்படம் ஒன்றில் தன்னிடம் ஏதுவும் இல்லை என தனது ட்ரவுசர் பாக்கெட்டை வடிவேலு திறந்து காட்டும் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
நிதி ஒதுக்கீடு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. அந்தவகையில், கர்நாடகத்திற்கு அநீதி இழைத்துள்ளதாக மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கர்நாடக காங்கிரஸ் அரசும், நிதி பங்கீட்டில் அநீதி இழைப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அம்மாநில அமைச்சரவையும் போராட்டத்தில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.