சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததால் பக்ரீத் கொண்டாடும் தேதி அறிவிக்கப்பட்டது. எனவே இந்தியாவில் பக்ரீத் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்படுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Bakrid 2025: Crescent Sighted in Saudi Arabia - When is it Celebrated in India? : பக்ரீத் அல்லது ஈத் அல் அதா என்பது இஸ்லாமிய பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகளில் ஒன்றாகும். இந்த பண்டிகையை துல் ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது நாளில் கொண்டாடுவது வழக்கம். அல்லாவின் ஆணைப்படி இறை தூதர் இப்ராஹீம் நபி தனது மகனை கடவுளுக்கு பலியிட தயாரானதை நினைவு கூறும் தியானத்திருநாள் இந்த பக்ரீத்.

எனவே, இந்த தியானத் திருநாளில் உலகம் முழுவதிலும் இருக்கும் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை நடத்தி, குர்பானி அளித்து தங்களது இறைவன் மீது இருக்கும் பக்தி மற்றும் நன்றியை வெளிப்படுத்துவார்கள். மேலும் இந்நாளில் ஏழை எளியோருக்கு தானம் செய்வது மிகவும் முக்கியமான கடமை என்று குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே இஸ்லாமியர்கள் இறைச்சி, உணவு ஆகியவற்றை மூன்றின் ஒரு பகுதியை தானமாக வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பொதுவாக இஸ்லாமியர்கள் தங்களது பண்டிகைகள் அனைத்தையும் சந்திரன் நாட்காட்டி அடிப்படையை வைத்து கொண்டாடுவது வழக்கம். சவுதி அரேபியாவில் மே 26 ஆம் தேதி பிறை நிலவு தெரிந்ததால் துல் ஹிஜ்ஜா மாதம் ஆரம்பமானது. துல் ஹிஜ்ஜா என்பது சந்திரன் நாட்காட்டியின் கடைசி மாதமாகும். இந்த மாதத்தில் தான் பிறை நிலவு தெரியும் நாள் தொடங்கும். மேலும் இம்மாதத்தின் பத்தாவது நாளில் தான் இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் இருக்கும் மெக்காவிற்கு ஹஜ் யாத்திரை செல்வார்கள். மேலும் இம்மாதத்தின் பத்தாவது நாளில் தான் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. துல் ஹிஜ்ஜா மாதம் தொடங்கியதால் சவுதி அரேபியாவில் இந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 இந்தியாவில் பக்ரீத் பண்டிகை எப்போது?

பொதுவாகவே சவுதி அரேபியாவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் நாளிற்கு அடுத்த நாள் தான் இந்தியாவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆகவே இந்தியாவில் ஜூன் 7-ம் தேதி சனிக்கிழமை அன்று தான் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கால்நடைகளை பலியிட்டு பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். இது இறைவனிடம் சரணடையும் மிகவும் புனிதமான காலமாக கருதப்படுகிறது. மேலும் இந்த பக்ரீத் பண்டிகையை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு நல்ல உறவை வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகும்.