தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பெட்ரோல் - கேஸ் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர். ஆனால், இதனை தடுப்பதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதைதொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ராட்சத இயந்திரங்கள் மூலம் புதிய விரிவாக்க பணிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஈடுபட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசியரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடையடைப்பு, உண்ணாவிரதம் என பொதுமக்கள் தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

மேலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். 10 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கை போலீசார் திரும்பப் பெற வேண்டும். அவர்கள் அனைவரையும் போலீசார் விடுவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

இதனிடையே தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். 

பேராசிரியர் ஜெயராமன் மற்றும் 9 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.