டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை நசுக்க பாஜக தேசிய செயலாளர் எச்,ராஜா கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அய்யாகண்ணு தெரிவித்தார்.

டெல்லி தமிழ்நாடு ஹவுசில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாகண்ணு சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாகண்ணு, விவசாயிகளாகிய நாங்கள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை சீர்குலைக்க பாஜகவினர் சதி செய்வதாக குற்றம்சாட்டினார்.தனது செல்போனில் அதற்கான ஆதாரங்களை வைத்திருப்பதாகவும் அய்யாகண்ணு தெரிவித்தார்.

நான் ஆடி கார் வைத்திருக்கிறேன் என்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களில்  சாப்பிடுகிறேன் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பொய்யான தகவலை தெரிவித்து வருகிறார் என்றும் அய்யாகண்ணு கூறினார்.

எங்களது போராட்டத்தை ஒடுக்க எச். ராஜா கொலை மிரட்டல் விடுவதாக தெரிவித்த அய்யாகண்ணு, போராட்டம் நடைபெறும் இடத்தில் லாரியை விட்டு ஏற்றிவிடுவோம் என பாஜகவினர் நாள் தோறும் மிரட்டி வருவதாகவும் அய்யாகண்ணு குற்றம்சாட்டினார்.