தமிழகத்தில் திருவண்ணாமலை, தேனி நகரில் 50 படுக்கைகளுடன் கூடிய ஆயுஷ் மருத்துவமனை அமைக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் யேசோ நாயக் தஞ்சையில் நிருபர்களிடம் கூறுகையில், “ நாடுமுழுவதும் 100 ஆயுர்வேதா, யுனானி,சித்தா, மற்றும் ஓமியோபதி மருத்துவமனைகள் அதாவது ஆயுஷ் மருத்துவமனைகள் அமைக்க முடிவு செய்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் 4 ஆயிரம் ஆயுஷ் மருத்துவர்களை முதன்மை சுகாதார மையங்களில் பணி அமர்த்தப்பட்டு, அவர்களுக்கு மத்தியஅரசு ஊதியம் அளித்து வருகிறது. எய்ஸ்ம் மருத்துவமனைக்கு இணையான தரத்தில் ஆயுஷ் மருத்துவமனை விலைவில் டெல்லியில் திறக்கப்பட உள்ளது.

மேலும், தேனி, திருவண்ணாமலையில் 50 படுக்கைகளுடன் கூடிய ஆயுஷ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூலிகை செடிகள், மருத்துவப்பயன்பாட்டுச் செடிகள் வளர்க்கவும், பாதுகாக்கவும், மேம்படுத்தவும் ரூ.563 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் ரூ.28.36 கோடி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.