சென்னையில் ஏடிம் காவலாளி ஒருவர் பணிச்சுமை காரணமாக திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.
1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும் அதை தொடர்ந்து துக்ளக் தர்பார் போல் தினமொரு அறிவிப்பை மோடி வெளியிடுவதால் பொதுமக்கள் அதிக அளவில் துன்பப்படும் நிலை உருவாகி உள்ளது.
நிம்மதியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தவர்கள் இப்போது பணத்தை மாற்ற வங்கிகள் முன்பும், ஏடிஎம்கள் முன்பும் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்களில் பணம் போட்டவுடன் வாடிக்கையாளர்கள் முண்டியடித்து குவிவதால் ஏடிஎம் காவலாளிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது.
கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி அதிக நேரம் உழைக்க வேண்டியுள்ளது. இதனால் ஏடிஎம் காவலாளிகளுக்கும் மன உலைச்சல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மன உலைச்சலுக்கு ஆளான ஏடிஎம் காவலாளி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
சென்னை ராயபேட்டையில் உள்ள சிட்டியூனியன் வங்கி ஏடிஎம்மில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் மதுரை. இவர் சென்னை ஜாம்பசார் , ஜானிஜான் கான் சாலையில் உள்ள முத்தையா தெருவில் வசித்துவந்தார். இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்தவர் வேலையில் இருந்த போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பபவ இடத்திலேயே சுருண்டுவிழுந்து இறந்து போனார்.
இது பற்றி பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்ப்பவ இடத்திற்கு வந்த ஜாம்பசார் போலீசார் உடலை கைப்பற்றி ராயபேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
