காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் காவலாளர்களை கண்டதும் தப்பியோடியதால் பணம் கொள்ளைபோவது தடுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே உள்ளது சென்னகுப்பம். இந்தப் பகுதியில் தனியார் வங்கி ஏ.டி.எம். ஒன்று உள்ளது. 

நேற்று அதிகாலை அந்த வழியாக காவலாளர்கள் வாகனத்தில் சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்து மர்ம நபர்கள் சிலர் காவலாளர்களை கண்டதும் தப்பியோடினர். சந்தேகமடைந்த காவலாளர்கள் உடனே ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று பார்த்தனர்.

அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு காவலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், ஏ.டி.எம். எந்திரத்தை சோதித்து பார்த்ததில் அதில் இருந்து பணம் கொள்ளை போகவில்லை என்பதை அறிந்து பெருமூச்சு விட்டனர். 

இதனைத் தொடர்ந்து காவலாளர்கள், ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வங்கி அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயற்சிப்பதும், காவலாளர்கள் வருவதை கண்டு தப்பியோடுவதும் பதிவாகி இருந்தது. 

பின்னர், இது குறித்து ஒரகடம் காவலாளர்கள் வழக்குப் பதிந்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.