தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு "சிறந்த மனிதருக்கான விருது" - வழங்கி கௌரவித்த ஆசிய செஸ் கூட்டமைப்பு!
ஆசிய செஸ் கூட்டமைப்பின் 2023ம் ஆண்டுக்கான சிறந்த மனிதருக்கான விருது, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1924ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் முதல் முதலாக துவங்கியது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள். அதன் பிறகு அதிகாரப்பூர்வமாக 1927ம் ஆண்டு லண்டனில் இந்த போட்டிகள் துவங்கியது. இந்நிலையில் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக, இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்றது என்பதை நாம் அறிவோம். அதேபோல எதிர் வரவிருக்கும் 45வது மற்றும் 46வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளும் முறையே புத்தாபேஸ்ட் மற்றும் உஷ்பகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடைபயிற்சியின்போது கீழே விழுந்த கே.எஸ். அழகிரி.. கால் மற்றும் தலையில் காயம் - என்ன நடந்தது?
இந்த நிலையில், தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மிக நேர்த்தியாக நடத்தியமைக்காக 2023ம் ஆண்டுக்கான ஆசிய செஸ் கூட்டமைப்பின் சிறந்த மனிதருக்கான விருது முதல்வர் ஸ்டாலினுக்கு தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
அதில் "மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் சிறிய வழிகாட்டலில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்குற வகையில் கழக அரசு நடத்தியது. இதனை போற்றுகிற வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு 2023ம் ஆண்டிற்கான ஆசிய செஸ் கூட்டமைப்பின் சிறந்த மனிதனுக்கான விருது ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திரு. பரத் சிங் சௌகான் உள்ளிட்டோர் இன்று வழங்கி சிறப்பித்தனர். இந்த பெருமை மிகு நிகழ்வில் நானும் பங்கேற்று மகிழ்ந்தேன்" என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
மேலும் இன்று சென்னை எழும்பூரில் புதியதாக மெருகூட்டப்பட்ட ஹாக்கி ஸ்டேடியத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.