. வழக்கமாக எல்லா தேர்தலிலும் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம் முன்புதான் கூட்டணி அமைப்போம். அதேபோல் இப்போதும் அமைக்கப்படும், பெரும்பான்மை இடங்களில் அதிமுக வென்று தனித்து ஆட்சி அமைக்கும்

சென்னை, வானகரத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “எனக்கு முன்னாள் பேசியவர்கள் அடுத்தாண்டு தேர்தல் குறித்து தெளிவாகச் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். தீயசக்தி திமுகவை அகற்றவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அவரது மறைவுக்குப் பின்னர் அம்மா அவர்கள் சோதனைகளைத் தாங்கி கட்டிக் காத்தார்கள். இருபெரும் தலைவர்கள் இருக்கும்போது பலதரப்பட்ட மக்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களைக் கொண்டுவந்து சாதித்தனர். அவர்களது ஆட்சியில்தான் மகளிருக்கு கல்வி வேலைவாய்ப்பு போன்ற அற்புதமான திட்டங்கள் கிடைத்தன. அமைதி, வளம், வளர்ச்சி எனும் கொள்கையை தாரக மந்திரமாகக் கொடுத்தனர்.

எம்ஜிஆரும், அம்மாவும் வகுத்துத்தந்த மக்கள் நலன், சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றை எக்காலமும் பேணிக்காப்பது அதிமுக. ஆட்சியில் இருக்கும்போதும் பத்திரிகை, ஊடகம் விமர்சனம் செய்தார்கள், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் விமர்சனம் செய்கிறார்கள். அதிமுக இருப்பதால்தான் ஊடகம் இயங்குகிறது என்பது விளங்குகிறது. இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு இல்லை, நம்மை தான் வாரிசாக பார்த்தார்கள். நமக்கு நன்மை பயக்கும் திட்டங்களை வழங்கியதால்தான், இன்றைக்கும் அதிமுகவை எவராலும் தொட்டுப்பார்கக் முடியவில்லை. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது, தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்பதற்கு நம்மோடு இருந்தவர்களே எதிரியோடு கைகோர்த்து சோதனை கொடுத்தார்கள். பெரும்பான்மை நிரூபிக்கும் தீர்மானம் கொண்டுவரும்போது, ஸ்டாலினும், திமுகவினரும் எப்படி நடந்துகொண்டனர் என்பதை தொலைக்காட்சியில் பார்த்தீர்கள்.

எல்லோருடைய ஆதரவால் தீர்மானம் நிறைவேற்றுகின்ற நிலையில் என் மேஜை மீது திமுக எம்.எல்.ஏக்கள் டான்ஸ் ஆடினார்கள். சபாநாயகரை இழுத்துத்தள்ளி அவரது இருக்கையில் அமர்ந்தார்கள். அப்படிப்பட்ட கொடுமைகளை ஏற்படுத்தியவர் ஸ்டாலின். அதையெல்லாம் மீறி வென்றதும் பொறுத்துக்கொள்ள முடியாமல் சட்டையைக் கிழித்துக்கொண்டு வீதியில் திரிந்தவர்தான் ஸ்டாலின்.

ஸ்டாலின் அவர்களே அன்று சட்டையை மட்டும்தான் கிழித்தீர்கள் அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், அப்போது எந்த நிலையில் இருப்பீர்கள் என்று தெரியவில்லை.

அதோடு அதிமுக ஆட்சியை உடைக்க சதித்தீட்டம் தீட்டப்பட்டது, உடைக்க வழக்குகள் போடப்பட்டது, அதையெல்லாம் தாண்டித்தான் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். இன்றைக்கும் திமுக நம் ஆட்சியைப் பற்றி விமர்சிக்க முடியவில்லை. அதிமுக பாஜகவோடு கூட்டணி என்றுதான் சொல்கிறார், ஆட்சியில் குறை இருக்கிறதா என்று கேட்டோம், அதைச் சொல்ல முடியவில்லை, அப்படியான சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம். இங்கே அமர்ந்திருக்கும் முன்னாள அமைச்சர்கள் என்னோடு சிறப்பான முறையில் பணியாற்றினார்கள், அதனால் நல்லாட்சியை மக்களுக்குக் கொடுத்தோம். அதே ஆட்சி தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்த செயற்குழு, பொதுக்குழுவில் வீற்றிருக்கிற அத்தனை பேரும் நினைத்தால் நிச்சயம் அது நிறைவேறும்.

இங்கே வந்திருக்கும் அனைவரும் பல்வேறு தேர்தலில் களம் கண்டவர்கள். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சிகளில் களப்பணியாற்றி வேட்பாளர்களாக வெற்றி பெற்றவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் திறமையானவர்கள்.

எப்படி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அரசியல் பாடம் கற்றவர்கள். ஆகவே அத்தனையும் உங்கள் அனுபவத்தில் இருக்கின்றது அதை இந்தத் தேர்தலில் பயன்படுத்துங்கள். நிச்சயம் 100% வெற்றி பெறுவோம் அதிமுக ஆட்சி மலரும், இதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. சிவிசண்முகம் குறிப்பிட்டார், நாமும் தேர்தல் வகுப்பாளரை வைத்திருக்கிறோம், நம்முடைய கணக்கு நமக்குத் தெரியும், அடுத்தாண்டு தேர்தல் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். நம்முடைய கழக நிர்வாகிகளுக்கே சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறது. அதைப் போக்குவது என் கடமை என்பதால் சில விளக்கங்களைக் கொடுக்கிறேன்.

தலைமைக் கழக நிர்வாகிகள் குறிப்பிட்டது போல வெறுமனே 2 லட்சம் வாக்குகளை 43 தொகுதிகளில் இழந்தோம் அதனால் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். அதுவும் யார் சூழ்ச்சியால் வாக்குகள் இழந்தோம் என்பதையும் சொனனர்கள். 2011-21 வரை பொற்கால ஆட்சியைக் கொடுத்தது அதிமுக. அக்காலகட்டத்தில் நாம் தேர்தலையும் சந்தித்தோம். 1991ல் திமுக 2 இடத்தில் தான் ஜெயித்தது. அம்மாவுடைய கூட்டணி சரித்திர சாதனை படைத்தது. அதன்பிறகு 1996ல் நாம் நான்கு இடங்களில்தான் வென்றோம். 2001ல் மீண்டும் அதிமுக வென்று அம்மா முதல்வரானார். 2006ல் திமுக 96 இடங்களில் வென்று மைனாரிட்டி ஆட்சி நடத்தியது.

2011ல் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று, திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியவில்லை. அப்போது கருணாநிதியே இருந்தார், அப்போதே உங்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடமில்லை. 2014ல் ஒரு எம்பிகூட திமுக வெற்றி பெற முடியவில்லை. அதிமுக 37 இடங்களில் வென்றது.

2016ல் அம்மா யாருடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் இரட்டை இலையில் போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களில் வென்றார். இப்படிப்பட்ட இயக்கத்தைப் பற்றி திமுக தலைவர் விமர்சனம் செய்வது கேலிக்கூத்தாக இருக்கிறது. சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். கீழே இருக்கும் சக்கரம் மேலே வரும், அது தெரியாமல் ஸ்டாலின் பேசிவருகிறார்.

நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் வேறு விதமாக வாக்களிப்பார்கள். அதுதான் தமிழ்நாட்டின் நிலைமை. 2019 எம்பி தேர்தலில் 39 நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டில் தான் வென்றோம், அப்போது 22 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது, அதில் 9 இடங்களில் நாம் வென்றோம்.

2021ல் அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வென்றோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவும் போட்டியிட்டது, நிலக்கோட்டை தொகுதி, நாடாளுமன்றத்தில் திமுக சுமார் 39 ஆயிரம் வாக்குகளில் வெல்கிறார்கள், அதே நேரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 20 ஆயிரம் வாக்குகளில் வென்றோம். ஒரே நேரத்தில் இரு தேர்தல்கள், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் திமுக போட்டியிடுகிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் திமுக அதிக வாக்குகள் வாங்கியது, சட்டமன்றத்தில் அதிமுக அதிக வாக்குகள் வாங்கியது. இப்படி 9 சட்டமன்றத் தொகுதியில் திமுகவை வீழ்த்தியது, அதுவே நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை திமுக அதிகமாக வாங்கினர். இதுதான் நிலைமை.

அதுமட்டுமல்ல, 2024 நாடாளுமன்றத் தேர்தல் 39 தொகுதி திமுகதான் வென்றது. ஆனால், நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் 10 தொகுதிகளில் அதிமுகவே அதிக வாக்குகள் பெற்றுள்ளது. இன்று பாஜக, அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. 2024 எம்பி தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக வாங்கிய வாக்குகள் இரண்டையும் சேர்த்தால் 41.33%. இந்த 41.33% என்று கணக்கு போட்டுப் பார்த்தால் 84 சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வாங்கியிருக்கிறோம். இங்கெல்லாம் வெற்றி உறுதி. 15 சட்டமன்றத் தொகுதியில் 1% வாக்குதான் குறைவு, 18 சட்டமன்றத் தொகுதிகளில் 1 முதல் 2% வாக்குகள் தான் குறைவு.

2021 சட்டமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல் ஒப்பிட்டுச் சொன்னேன். 2021ல் 75 இடங்களில் வென்றோம், இப்போது அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தபின் 84 இடங்களில் வென்றிருக்கிறோம். 2019ல் 2 இடங்களில் வென்று 75 தொகுதிகள் என்று சொன்னால், இப்போது 84 தொகுதிகள் உறுதி. எனவே, வருகிற தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும்.

நம்முடைய தீர்மானத்தில் கூட கொடுத்திருக்கிறோம், திமுக கவர்ச்சிகரமாக 525 அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சிக்கு வந்து. நான்கில் ஒரு பங்கு அறிவிப்பை கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலை. அதில் முக்கியமானவை என்றால் கல்விக்கடன் ரத்து இல்லை, கேஸ் சிலிண்டர் மானியம் இல்லை, பெட்ரோல் டீசல் மானியம் குறைக்கவில்லை, நீட் தேர்வு ரத்து என்றனர், ரகசியம் இருக்கிறது என்றார், துணை முதல்வர், ரகசியத்தை சொல்லவே இல்லை. 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என்றனர் உயர்த்தவில்லை, ஏழை மக்களை ஏமாற்றிவிட்டனர்.

அரசு காலிப்பணியிடங்கள் அரசாங்கத்தில் மூன்றரை லட்சம், அரசு சார்ந்த இடங்களில் 2 லட்சம் என மொத்தம் 5.5 லட்சம் பதவிகள் நிரப்புவோம் என்று சொன்னார்கள், நிரப்பவில்லை, வெறும் 50 ஆயிரம் பேர் தான் நிரப்பினர். இந்த நான்கரை ஆண்டுகளில் 75 ஆயிரம் பேர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். அதோடு, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்குத்தங்கம், அம்மா மினி கிளினிக், இருசக்கர வாகனம் இப்படி மக்களுக்கு நன்மை பயக்கும் அதிமுகவின் திட்டங்களை நிறுத்தியதுதான் அவர்கள் சாதனை.

அடிக்கடி ஸ்டாலின் சொல்வதெல்லாம் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். எப்போது கொடுத்தார்கள்..? அதிமுக சொன்ன பின்னர்தான் கொடுத்தனர். அதுவும் அதிமுக சார்பில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி 28 மாதம் கழித்து, அதிமுகவின் அழுத்தம் காரணமாகத்தான் உரிமைத் தொகை கொடுத்தார்.

இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு விதிகளைத் தளர்த்தி உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளார். வெறும் நான்கு மாதங்கள் தான் கொடுக்க முடியும், 56 மாதம் கொடுக்கவில்லை, குடும்பத் தலைவியின் கஷ்டத்தைப் பார்த்து கொடுக்கவில்லை, அடுத்தாண்டு தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு ஸ்டாலின் விதியைத் தளர்த்தி ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். அதுவும் தேர்தலுக்காகத்தான் கொடுக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் வாங்கிக் கொள்வார்கள், ஆனால் ஓட்டு மட்டும் அதிமுகவுக்குத்தான் போடுவார்கள்.2026 தேர்தலில் நல்ல கூட்டணி அமையும் கவலைப்படாதீர்கள், அதிமுகவைப் பொறுத்தவரை சொந்த பலம் வாய்ந்த கட்சி. ஆனால், திமுக மக்கள் பலம் இழந்த கட்சி. அதனால்தான் இவர் கட்சியை நம்பி நிற்கவில்லை, கூட்டணியை நம்பி நிற்கிறார். வழக்கமாக எல்லா தேர்தலிலும் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம் முன்புதான் கூட்டணி அமைப்போம். அதேபோல் இப்போதும் அமைக்கப்படும், பெரும்பான்மை இடங்களில் அதிமுக வென்று தனித்து ஆட்சி அமைக்கும்’’ எனத் தெரிவித்தார்.