சென்னை.. 16 கோடியில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் - திறந்து வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் இன்று நடைபெற்ற இரு முக்கிய நிகழ்வுகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றார்.
சென்னை, எழும்பூரில் உள்ள, மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் ரூ. 16 கோடி மதிப்பிலான ஹாக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மண்டபம் ஆகியவற்றை இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023 போட்டியின் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள சிலையையும் முதலமைச்சர் திறந்துவைத்து உரையாற்றினார். வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ஆசிய ஆண்டவர் ஹாக்கி கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அதே போல, ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திரு.பரத் சிங் சௌகான் அவர்கள் தலைமையில் செஸ் கூட்டமைப்பினர் முதலவரை நேரில் சந்தித்து, 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்திய முதலமைச்சர் அவர்களுக்கு ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருதினை வழங்கினார்கள்.