ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நாளை தொடக்கம்..! கோப்பையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கிய சர்வதேச ஹாக்கி நிர்வாகிகள்
ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் போட்டிக்கான “பாஸ் தி பால்” சுற்றுப்பயண கோப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
ஆசிய கோப்பை ஹாக்கி
7-வது “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டி நாளை முதல் வருகிற 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டி இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கிறது. இந்த போட்டியில் வழங்கப்படவுள்ள கோப்பை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வந்தது. இதனையடுத்து தலைமைசெயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் “பாஸ் தி பால் கோப்பை" சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது தயப் இக்ராம் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 7வது “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023 சென்னை" போட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
உலக தரத்தில் விளையாட்டு அரங்கம்
ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்தவுள்ள இந்தப் போட்டியில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, எழும்பூர், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்துகின்ற வகையில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மாதம் 28ஆம் தேதி திறந்து வைத்தார்.
முதலமைச்சரிடம் ஆசிய கோப்பை
"ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023 சென்னை” போட்டி நடைபெற உள்ளதையொட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சென்னை மெரினா கடற்கரையில் போட்டிக்கான கோப்பையை அறிமுகம் செய்யப்பட்டு, “பொம்மன்" இலச்சினையை வெளியிட்டார். மேலும், ஆசிய ஹாக்கி கோப்பையினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்கின்ற வகையில் "பாஸ் தி பால்" கோப்பை சுற்றுப்பயணத்தை தொடங்கி வைத்தார். "பாஸ் தி பால் கோப்பை" சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று நேற்று (1.8.2023) சென்னை வந்தடைந்தது. இந்த கோப்பையை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் திரு. முகமது தயப் இக்ராம் அவர்கள் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கினார்.