april 1st onwards helmet should wear

மதுரையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தலைக்கவசம் இல்லாமல் பயணித்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.


தன் கணவர் விபத்தில் இறந்ததால், கூடுதல் இழப்பீடு தொகை தரவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மல்லிகா என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன் , இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்யலாம் என்றும் அதிரடி தீர்ப்பை வெளியிட்டார்.

 இதனைத் தொடர்ந்து 2015 ஜூலை 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பல வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், கடந்த 2016 ஆம் ஆண்டில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 225 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தடுக்கும் விதமாக மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுவதாகவும், விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குபவர்களின் ஓட்டுநர் உரிமம், மற்றும் அவ்வாகனத்திற்கான அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றார்.