இராயக்கோட்டை,
கெலமங்கலம் அருகே கொலை வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க இருந்தவரை கொலை செய்த அவரது கூட்டாளிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள கோபனப்பள்ளியைச் சேர்ந்தவர் எல்லப்பா. இவரது மகன் சௌடப்பா (36). இவர் ஒரு விவசாயி. இவர் மீது கடந்த 2008–ஆம் ஆண்டு ஓசூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வசந்தனை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் சௌடப்பா ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சௌடப்பாவும், ஒசபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரன் (27), கோபனப்பள்ளியைச் சேர்ந்த பாப்பண்ணா (42) ஆகியோர் சேர்ந்து மது அருந்துவதற்காக கூலிசந்திரம் அருகே உள்ள ஈஸ்வரன் கோவில் பின்புறமாக சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சௌடப்பாவை, சிவசங்கரனும், பாப்பண்ணாவும் சேர்ந்து சரமாரியாக கட்டையால் தாக்கினார்கள்.
இதில் பலத்த காயம் அடைந்த சௌடப்பாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சௌடப்பா உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக சௌடப்பாவின் மனைவி மம்தா (26) கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் தேன்கனிக்கோட்டை துணை காவல் சூப்பிரண்டு சௌந்தரராஜன், இராயக்கோட்டை காவல்துறை இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், கெலமங்கலம் சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் காவலாளர்கள் விசாரணை நடத்தி சிவசங்கரன், பாப்பண்ணா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
ஓசூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வசந்தன் கடந்த 2008–ஆம் ஆண்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் சௌடப்பா, சிவசங்கரன், பாப்பண்ணா ஆகியோர் உள்பட சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். அந்த வழக்கு ஓசூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த வழக்கில் சௌடப்பா ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தெரிய வந்ததும் சிவசங்கரன், பாப்பண்ணா ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அவர்கள் மது அருந்த சௌடப்பாவை அழைத்துச் சென்று அடித்துக் கொன்றுள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.
கெலமங்கலம் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவரை அவருடைய கூட்டாளிகளே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
