Approved by the Appellant Authority for 225 Its free ...

கரூர்

ஏரி, குளம், நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல், சௌடு, களிமண்ணை தூர்வாரி அவற்றை இலவசமாக எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த முதல் கட்டமாக 225 பயனாளிகளுக்கு ஆட்சியர் கோவிந்தராஜ் அனுமதி வழங்கினார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை குடிமராமத்து பணி செய்வதன் மூலம் கிடைக்கும் வண்டல் மண், சௌடு, களிமண் போன்றவைகளை விவசாயத்திற்காகவும், மண்பாண்டம் செய்யவும், வீடுகளுக்கு பயன்படுத்தவும் விலையில்லாமல் மக்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அரசு சார்பில் மண் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளியணையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

பயணாளிகளுக்கு இலவசமாக மண் வழங்கிய ஆட்சியர் கூறியது:

“ஏரி, குளம் ஆகியவற்றில் படிந்துள்ள வண்டல், சௌடு, களிமண்ணை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக வெட்டி எடுத்து, நீர்நிலைகளை தூர்வாரி குடிமராமத்து பணி செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதற்காக கரூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 18 குளங்களும், பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள 108 குளங்களும், இதர குளங்கள் 401 என மொத்தம் 527 குளங்கள் கண்டறியப்பட்டு இவற்றில் பொதுப்பணித்துறையின் வாயிலாக 14 குளங்களிலும், ஊரக வளர்ச்சி கட்டுப்பாட்டில் உள்ள 52 குளங்களிலும் என 66 குளங்களில் மண் வெட்டி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக ஏற்கனவே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகள் மற்றும் மக்களிடமிருந்தும் முதல் நாள் அன்றே 1335 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் முதல்கட்டமாக 225 பயனாளிகளுக்கு மண் எடுத்துக்கொள்ள அனுமதி உத்தரவு வழங்கப்பட்டு மண் அள்ளும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் மூலம் எதிர்காலத்தில் பெறப்படும் மழைநீரை சேகரித்து அதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு நீர்நிலைகளை மேம்படுத்தி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயனுள்ளதாக உள்ள இத்திட்டத்தை மக்கள், விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி தங்கள் விளைநிலங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கோட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியம், சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், கனிமவள உதவி இயக்குனர் வேடியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.