மகளிர் உரிமைதொகை திட்டம்..! இன்று முதல் நேரடியாக வீடு தேடி வரும் விண்ணப்பம்.... எந்த எந்த ஆவணங்கள் தேவை.?
சென்னையில் கலைஞர் உரிமை தொகைக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பம் இன்று முதல் வீடு வீடாக வழங்கப்படவுள்ளது. தகுதியுடைய அனைவருக்கும் கலைஞர் உரிமை தொகை வழங்கப்படும், யாரும் பதற்றம் அடைய தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதி
திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து திமுக அரசு பதவியேற்று இரண்டு வருடம் கடந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்தநிலையில் இந்த திட்டம் பெறுவதற்கான பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
விண்ணப்பம் வழங்கும் பணி
மொத்தமுள்ள 200 வார்டுகளில் 98 வார்டுகளில் முதல்கட்ட முகாம் ஜூலை 24ம் தேதி முதல் ஆக.4ம் தேதி வரையிலும், மீதமுள்ள 102 வார்டுகளில் இரண்டாம்கட்ட முகாம் ஆக.5ம் தேதி முதல் ஆக.16ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று முதல் நியாயவிலைக் கடைப் பணியாளர் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார். டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு நான்கு நாட்கள் முன்பாகத் தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத் தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள் என்ன.?
விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்துக்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. விண்ணப்பப் பதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும்.
இதையும் படியுங்கள்
எங்கும் அலைய வேண்டாம்.. வீட்டிலிருந்தே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?