கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் மற்றொரு நபரான சயான் என்பவரும் விபத்தில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கொடநாடு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் இன்று நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். 

கனகராஜின் மரணம் தற்செயலானாதா அல்ல திட்டமிடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த சயான் என்பவரும் தற்போது விபத்தில் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 கோவையில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்த சயான் நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் கேரளாவுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பாலக்காடு அருகே சென்று கொண்டிருந்த போது சயான் பயணித்த கார் டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சயானின் மனைவி வினுப்பிரியா, மற்றும் 5 வயது குழந்தை உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய சயான் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முக்கிய குற்றவாளி என போலீசாரால் சந்தேகிக்கப்படும் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த அதிர்ச்சி மறைவதற்குள், மற்றொரு குற்றவாளியாக கருதப்படும் சயானும் விபத்தில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.