கடலூர்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - குஜராத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெசர்ட் எக்காலஜி நிறுவனம் இடையே கூட்டு ஆராய்ச்சி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வருகைத் தந்த குஜராத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெசர்ட் எக்காலஜி நிறுவனத்துடன், ஆராய்ச்சித் திட்டங்களை கூட்டாக மேற்கொள்வது தொடர்பாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - குஜராத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெசர்ட் எக்காலஜி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செ.மணியன் முன்னிலையில், பதிவாளர் கே.ஆறுமுகம், குஜராத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெசர்ட் எக்காலஜி நிறுவன இயக்குநர் ஏ.விஜயகுமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நிறுவனங்களும் தகவல் பரிமாற்றம், புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மேலாண்மைத் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களை கூட்டாக மேற்கொள்ளும்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதன்மை தொடர்பு அதிகாரிகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் புல முதல்வர் ஏ.சண்முகம், குஜராத் இன்ஸ்டிட்யூட் ஆப் டெசர்ட் எக்காலஜி, கடல் மற்றும் கடல்ஓர சூழ்நிலை பிரிவு தலைமை நிர்வாக விஞ்ஞானி திவாகரன் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆட்சி மன்றகுழு உறுப்பினர் வி.திருவள்ளுவன், கலைப்புல முதல்வர் எம்.நாகராஜன், ஆட்சிமன்றக் குழு முன்னாள் உறுப்பினர் கே.கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.