பிறந்தநாள் கொண்டாடுவதில்லை: திருமண நிகழ்ச்சியில் அண்ணாமலை சுவாரஸ்யம்!
நான் எனது பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என திருமண நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்துார் ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீராம் பள்ளி சார்பில் 39 ஜோடிகளுக்கு திருமணம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமணம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - விழுப்புரம் ஜி.எஸ்.டி., சாலையில், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில், ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் திடலில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு தலைமை தாங்கிய அண்ணாமலை, மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பிறகு அவர் பேசியதாவது: “இந்த அரங்கத்தில் இருக்கும் நாம் அனைவருமே எங்கோ பாக்கியம் செய்திருக்கிறோம். ஆண்டவனின் விதி நம்மை இங்கு ஒன்று சேர்த்திருக்கிறது. 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க பெரிய மனது வேண்டும். ஒருவரின் வாழ்வில் மறக்க முடியாதது திருமண நாள். அந்த நாளை இனிதாக மாற்றியதற்காக முரளி ரகுராம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாஜக சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அமைச்சரவை மாற்றம்: யார் பதவிக்கு வேட்டு? வருண் காந்திக்கு சீட் மறுப்பு?
மணமக்களை எப்படி வாழ்த்துவது; நாம் அனைவரும் ஒரே மாதிரி தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறோம். 96ஆவது வயதிலே நடக்கக் கூடிய திருமணத்துக்குத்தான் தீர்க்க சுமங்கலி திருமணம் என்று சொல்வோம். அப்படிப்பட்ட திருமணத்தை 39 ஜோடிகளுக்கும் ஆண்டவன் அருள வேண்டும். அனைத்து செல்வங்களும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும். அதனை ஆண்டவன் அவர்களுக்கு அருள வேண்டும் என பிரார்த்தணை செய்து கொள்கிறேன்.
இந்த பகுதியை பாஜகவின் கோட்டையாக மாற்றிக் காட்டும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. இங்கு மாவட்ட, மாநில நிர்வாகிகள் அனைவரும் வந்திருக்கிறார்கள். எனவே, உள்ளபடியே எனக்கு இந்த நிகழ்வு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிகழ்ச்சியை யாரும் நமது வாழ்வில் மறக்க முடியாது. சாதாரண மனிதனான எனக்கு மரியாதை அளித்து இந்த திருமணத்துக்கு தலைமை தாங்க அழைத்துள்ளனர்.
என்னுடைய பிறந்தநாள் விழாவில் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றார்கள். ஆனால், நான் எனது பிறந்தநாளை கொண்டாடுவதில்லை; எனது பிறந்தநாள் அப்படிப்பட்ட நாள் அல்ல என்று கூறினேன். உகந்த நாளாக பார்த்து திருமணம் நடத்துங்கள் அதற்கு நாங்கள் அனைவரும் வருகிறோம் என்றேன். உங்கள் அனைவருக்கும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.” இவ்வாறு அண்ணாமலை பேசினார்.