திமுக ஃபைல்ஸ் 2 வீடியோ ரீலீஸ்! ரூ.5600 கோடி ஊழல் பற்றி புட்டு புட்டு வைக்கும் அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் 2வது பாகத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார். அப்போது திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இந்த திமுக ஃபைல்ஸ் 2இல் ரூ.5600 கோடி மதிப்பிலான மூன்று ஊழல்கள் குறித்த ஆவணங்களையும், ஆதாரங்களையும் வழங்கியிருக்கிறார். ஆளுநரைச் சந்தித்த பின்பு, ட்விட்டரில் ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், மூன்று ஊழல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ட்விட்டரில் வீடியோவைப் பதிவிட்ட அவர், ஈ.டிஎல். (ETL) இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.3000 கோடி ஊழல், போக்குவரத்து துறையில் ரூ.2000 கோடி ஊழல், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கார்ப்பரேஷனில் ரூ.600 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் பட்டியலிட்டுள்ளார். தனது பாதயாத்திரையின்போது இதைப் பற்றி மேலும் விரிவாக செய்தியாளர்களிடம் பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஊழலில் திளைக்கும் திமுக அரசிடம் பதிலை எதிர்பார்ப்பதாகவும் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.