லண்டன் முருகன் கோயிலில் அண்ணாமலை தரிசனம்: அனைவருக்கும் வேண்டிக் கொண்டதாக ட்வீட்!
லண்டன் சென்றுள்ள அண்ணாமலை அங்குள்ள முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்களை மே 30ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் அக்கட்சி நடத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வழிகாட்டுதல்படி, அக்கட்சியினர் சாதனை விளக்கக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திடீரென லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். ஆறு நாட்கள் பயணமாக அவர் லண்டன் சென்றுள்ளதாகவும், இது முழுக்க கட்சி ரீதியிலான பயணம் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லண்டனில் உள்ள தமிழர்களை சந்தித்து, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து அவர் பேசுவார் எனவும் தெரிகிறது.
இந்த நிலையில், லண்டன் சென்றுள்ள அண்ணாமலை அங்குள்ள முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று லண்டனிலுள்ள அருள்மிகு ஶ்ரீமுருகன் திருக்கோவிலுக்குச் சென்று, அனைவரின் நலனுக்காகவும் வேண்டிக் கொண்டேன். முருகப்பெருமானை தரிசிக்க வந்த தமிழ் சொந்தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.” என பதிவிட்டுள்ளார்.
நாங்க இருக்கோம்; ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு தொலைபேசியில் உறுதி அளித்து நம்பிக்கை ஏற்படுத்திய கனிமொழி
அத்துடன், லண்டனில் அம்பேத்கரின் நினைவு இல்லத்திற்கும் அண்ணாமலை சென்றார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சிற்பி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் லண்டன் நினைவு இல்லத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அண்ணலின் கல்விப் பயணத்தில் முக்கியப் பங்கு வகித்து, பின்னாளில் மகத்தான அறிவுப்புரட்சிக்கு வித்திட்ட அவரது லண்டன் இல்லத்தினை நேரில் கண்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
டாக்டர் அம்பேத்கர், 1921-22 ஆண்டுகளில், லண்டன் பொருளாதாரப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்றபோது, லண்டனில் உள்ள 10 கிங் ஹென்றி சாலையில் வசித்து வந்தார். இந்த இல்லத்தை, மகாராஷ்டிரா மாநில அரசு ரூ.40 கோடிக்கு வாங்கியது. பின்னர் இந்த இல்லம், 2015 ஆம் ஆண்டு பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, நமது மாண்புமிகு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
இன்றைய தினம், அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவை எதிர்த்து அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து போராடிய டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.” என பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்ற அண்ணாமலை, கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றார். அதன் தொடர்ச்சியாக, 6 நாட்கள் பயணமாக அண்ணாமலை லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.