Asianet News TamilAsianet News Tamil

Anna University VC Surappa :தழிழக அரசின் நிலைபாடு..? விசாரணை அறிக்கையின் நகலை வழங்கலாமா..? பதிலளிக்க உத்தரவு..

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணைய அறிக்கை நகலை அவருக்கு வழங்கலாமா என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Anna University Ex VC Surappa case
Author
Anna University, First Published Jan 3, 2022, 2:25 PM IST

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டதால் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்றும் சூரப்பா பதவிக்காலத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆணையம் கண்டறிந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆணையத்தின் மீதான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்றும், முன்னாள் துணை வேந்தர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த நடவடிக்கைகளை தொடரப் போகிறீர்களா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மனுதாரர் தொடர் அச்சத்திலேயே இருக்க முடியுமா? இது ஊழலாக இருந்தால் விட மட்டோம் என்றும் நீதிபதி தெரிவித்தார். பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில், சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தமிழக ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், அதற்காக ஆணைய அறிக்கை, ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அதற்கு அளிக்கும் விளக்கத்தை ஆளுநருக்கு அனுப்பலாம் எனவும் சூரப்பா தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை சூரப்பாவுக்கு வழங்கலாமா என விளக்கமளிக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios