பாண்டி பஜாரில் உள்ள அஞ்சப்பர் ஓட்டலில் ஓட்டல் மேலாளரை தனி அறையில் அடைத்து வைத்து, பைப்பு பிரம்பால் செம மாத்து கொடுத்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

அஞ்சப்பர் ஓட்டலின் தாம்பாரம் கிளையில் மேலாளராக பணியாற்றி வந்தவர் துரைபாண்டி. இவருக்கு வயது 27. இவருக்கும் ஓட்டல் நிர்வாகத்திற்கும் கடந்த சில மாதங்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.  

இதன் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் இவருக்கு சம்பளம் தராமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி வேலையை விட்டு நின்றுள்ளார். பின்னர் இவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஹோட்டலின் நிர்வாக இயக்குனர் கந்தசாமியிடம் சம்பளம் வழங்குமாறு கேட்டுள்ளார். பின்னர் துரைப்பாண்டியை பாண்டி பஜாரில் இயங்கும் அஞ்சப்பர் ஹோட்டலுக்கு வரச் சொல்லி சம்பளத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறி உள்ளார். இதனை நம்பி சென்ற துரைபாண்டியை, ஓட்டலில் வேலை செய்து வந்த ஊழியர்களை கொண்டு சரமாரியாக தாக்கி உள்ளனர்.

பின்னர் தனி அறையில், அவரை அடைத்து வைத்து உண்ண உணவும் கொடுக்காமல் நேற்று மதியம் முதல் இரவு வரை அவ்வப்போது அடித்து  துன்புறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட துரைபாண்டி காவல் நிலைய கட்டுப்பாடு அறைக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி உள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஓட்டல் முழுக்க சோதனை செய்து உள்ளனர். தொடக்கத்தில் ஓட்டல் அறையை சோதனை செய்ய  ஊழியர்கள் தடுத்து உள்ளனர். பின்னர் எழுந்த சந்தேகத்தின் பேரில், அனைத்து அறையையும் போலீசார் சோதனை செய்து உள்ளனர்.அப்போது ஒரு தனி அறையில் அடைக்கப்பட்டு காயங்களுடன் காணப்பட்ட துரை பாண்டியை மீட்டு விசாரணை நடத்தியதில் இந்த அனைத்து தகவலும் வெளிவந்துள்ளது.

இது தவிர சம்பளம் வாங்க வந்த துரைபாண்டியிடம், "நீ வேலை செய்து வந்த காலத்தில்,17 லட்சம் ரூபாய் அவ்வப்போது திருடி சென்று விட்டாய். அதனை திருப்பி கொடு என கூறி தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதாக அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்து உள்ளார் துரைபாண்டி.

இந்த விவகாரம் தொடர்பாக துரைப்பாண்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஓட்டல் நிர்வாக இயக்குநர் கந்தசாமி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.