நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்த அர்ச்சகர் வெங்கடேஷ் தவறி விழுந்து பரிதாப மரணமடைந்ததற்கு கோயில் நிர்வாகத்தினரின் அஜாக்கிரதையே காரணம் என புகார் எழுந்துள்ளது.

 

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கீழே இறங்க முயற்சித்த 53 வயதான அர்ச்சகர் வெங்கடேஷ் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட இந்த ஆஞ்சநேயர் சிலை வெட்டவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தில் இருந்து 22 அடி, பாதத்தில் இருந்து 18 அடி உயரம் கொண்ட இந்த சிலை 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லில் அமைக்கப்பட்டது. இந்த ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம், அலங்காரம் செய்ய 8 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட ஏணி  மேடை அமைக்கப்பட்டு பூஜைகள், அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். அந்த மேடையில் ஏறி அர்ச்சகர் ஆஞ்சநேயருக்கு அபிஷேகத்தை முடித்துவிட்டு மாலை அணிவித்தார். பிறகு இறங்க முயற்சித்த போது 8 அடி உயரத்தில் இருந்து வழுக்கி விழுந்து தலையில் பலத்த அடி பட்டு உயிரிழந்தார். 

அந்த வீடியோ வெளியாகி தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அர்ச்சகர் வெங்கடேஷ் மரணத்துக்கு ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகத்தின் அஜாக்கிரதையே காரணம் என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அவ்வளவு உயரத்தில் இருக்கும் சிலைக்கு பூஜை, அபிஷேகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள ஏணி மேடையில் கைப்பிடி அரண் அமைக்கப்படவில்லை. புகழ்பெற்ற இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் பக்தர்கள் பாலாபிஷேகம், நெய், எண்ணெய், தயிர் போன்ற பலவகைகளில் அபிஷேகம் செய்து வருகின்றனர்.

இவை அனைத்துமே வழவழப்பு தன்மை கொண்டவை. அதிலும் 18 அடி உயரமுள்ள அந்த சிலைக்கு 8 அடி உயரத்தில் இருந்து செய்யப்படும் அபிஷேகங்கள் அந்த இரும்பு ஏணி மீது படியாமல் இருக்குமா? இதனால் வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம் இருப்பதை கோயில் நிர்வாகம் உணராமல் போனது எப்படி? திறந்த வெளியில் அமைந்துள்ள சிலை மீது மழையடிக்கும். வெயிலடிக்கும். பொதுவாக சூரிய ஒளி நேரில் படும் இடங்களில் தேங்கி இருக்கும் தண்ணீர் தொட்டிகளில் பாசி படர்ந்து வழக்கும் தன்மை அதிகரிக்கும். இதையெல்லாம் தெரிந்தும் பாதுகாப்பு அரண்களை ஏற்பாடு செய்யாமல் இருந்துள்ளது கோயில் நிர்வாகம். ஆக அர்ச்சகர் வெங்கடேஷ் உயிரிழப்புக்கு ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகத்தின் அஜாக்கிரதையும், அலட்சியப்போக்குமே காரணம் என தேசிய அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.