தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாமகவில் தலைவர் பதவிக்கான போட்டி நிலவி வருகிறது. ராமதாஸ் தலைவர் பதவியை விட்டுத்தர மறுக்கும் நிலையில், அன்புமணி ராமதாஸ் 100 நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

Anbumani People Rights Retrieval Journey : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கட்சிப்பணிகளை தீவிரப்படடுத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து தொகுதி நிலவரம், கட்சியின் செல்வாக்கு உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்தில் முக்கிய எதிர்கட்சியான பாமகவில் தந்தை மகனுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. யார் கட்சிக்கு தலைவர் என போட்டியானது நீடித்து வருகிறது. இதனால் அக்கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

பாமக தலைவர் பதவிக்காக தந்தை - மகன் மோதல்

பாமக தலைவர் தான் தான் என ராமதாஸ் தெரிவித்து வருகிறார். எனது மூச்சு நிற்கும் வரை தலைவர் பதவியை அன்புமணிக்கு விட்டுத்தரமாட்டேன் என அறிவித்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜூலை 25 தேதி முதல் 100 நாள்கள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் அன்புமணி இராமதாஸ் மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதை விட, நல்லாட்சி வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதில் தான் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதைப் போல தமிழகத்தில் நடைபெற்று வரும் விளம்பர மாடல் அரசால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பது தான் உண்மை.

100 நாள்கள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்

ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் ஒரே ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கூட கட்டப்படவில்லை; ஒரே ஒரு மருத்துவ மாணவர் சேர்க்கை இடம் கூட அதிகரிக்கப்படவில்லை; அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை; உழவர்களுக்கு ஒன்றுமே செய்யப்படவில்லை. நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களின் கொள்முதல் விலைகளை உயர்த்த மறுக்கும் அரசு, பாசன வசதிகளை செய்து தர தவறிவிட்டது. உழவர்களின் நலன் காக்கும் அரசு என்று கூறிக்கொண்டே அவர்களின் விளைநிலங்களை பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் பாவத்தை அரசு செய்கிறது.

திமுக அரசின் இந்த அவலங்கள் குறித்து மக்களிடம் விழிப்ப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும், மக்களிடமிருந்து மோசமான ஆட்சியால் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியதும் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலையாயக் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் பசுமைத் தாயகம் நாளான ஜூலை 25 ஆம் தேதி தொடங்கி, தமிழ்நாடு நாளான நவம்பர் ஒன்றாம் தேதி வரை மொத்தம் 100 நாள்கள் கால அளவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கவுள்ளது.

100 நாள்கள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் நோக்கம் என்ன.?

கீழ்க்கண்ட உரிமைகளை வென்றெடுப்பது தான் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மேற்கொள்ளவுள்ள பயணத்தின் நோக்கங்கள் ஆகும். விரிவான பயணத் திட்டம் அடுத்த சில நாள்களில் வெளியிடப்படும்.

1. சமூக நீதிக்கான உரிமை

2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை

3. வேலைக்கான உரிமை

4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை

5. வளர்ச்சிக்கான உரிமை

6. அடிப்படை சேவைகளுக்கான உரிமை

7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை

8. மது & போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை

9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை

10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஓர் அரசியல் கட்சிக்கானது அல்ல. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கானது. எனவே. உன்னத நோக்கம் கொண்ட இந்தப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.