கரூர் நகரில் விஜய் பங்கேற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். உயர்நிலை விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கரூர் நகரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகக் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
உயர்நிலை விசாரணை கோரும் அன்புமணி:
"பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பரப்புரைக்கான ஏற்பாடுகளைச் செய்வதிலும், கூட்டத்தைக் காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்குக் காரணமாகும்," என்று இராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், "கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்:
நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
"காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைந்து உடல் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழக அரசியல் மற்றும் பொதுவெளியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
