கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' தளத்தில் கவலை தெரிவித்ததுடன், போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளிக்கவும், நிலைமையைச் சீராக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பதிவு:

"கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்களையும் – மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்."

மேலும், "அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏடிஜிபி-யிடமும் பேசியிருக்கிறேன்" என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

ஒத்துழைப்புக் கோரிக்கை:

இறுதியாக, மருத்துவமனையில் நிலவும் பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்த, "பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வரின் உடனடி உத்தரவுக்குப் பிறகு, கரூர் அரசு மருத்துவமனை மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதிகளில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.