Asianet News TamilAsianet News Tamil

52 ஆயிரம் விடைத்தாள்களை திருத்த 9 மாதங்களா? முடிவுகளை வெளியிட முடியாமல் டிஎன்பிஎஸ்சி திணறுவது ஏன்? - அன்புமணி

தேர்வுகளின் முடிவுகளை 9 மாதங்களாகியும் வெளியிட முடியாமல் டிஎன்பிஎஸ்சி திணறிக்  கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ள அன்புமணி,இதிலிருந்தே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாட்டு வேகத்தை மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும் என கூறியுள்ளார். 

Anbumani questioned why TNPSC Group 2 exam results have not been released for 9 months KAK
Author
First Published Nov 7, 2023, 8:08 AM IST | Last Updated Nov 7, 2023, 8:08 AM IST

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு

தமிழக அரசுத் துறைகளில் தொகுதி 2, 2 ஏ பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் இன்று வரையிலும்  வெளியிடப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கயில், தமிழக அரசின் முக்கியப் பணிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான  நடைமுறையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இரண்டாம் தொகுதி பணியிடங்கள் 121,  தொகுதி 2ஏ பணியிடங்கள் 5097 ஆகியவற்றை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அத்தேர்வுகளில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்த  11.78 லட்சம் பேரில், 9.94 லட்சம் பேர் கடந்த ஆண்டு மே மாதம் 21-ஆம் நாள் நடத்தப்பட்ட முதனிலைத்  தேர்வை எழுதினார்கள். 

Anbumani questioned why TNPSC Group 2 exam results have not been released for 9 months KAK

மிக எளிதாக திருத்தி விட முடியும்

அவர்களில் இருந்து ஒரு பணிக்கு 10 பேர் வீதம் 52,180 பேர் முதன்மைத்  தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த பிப்ரவரி 25-ஆம் நாள் நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வுகளை அவர்களில் பெரும்பான்மையினர் எழுதினர். அத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப் படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 மாதங்களாகியும் இன்று வரை வெளியிடப்படவில்லை. தொகுதி 2, 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை 9 மாதங்களாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. முதன்மைத் தேர்வை எழுதியவர்கள் வெறும் 52,000 பேர் மட்டும் தான். முதன்மைத் தேர்வில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 தாள்களை எழுத வேண்டும்; அதன்படி மொத்தம் 1.04 லட்சம் விடைத்தாள்களை  திருத்த வேண்டும். அவை அனைத்தும் இரண்டே வகைப்பட்டவை தான். அவற்றை மிக எளிதாக திருத்தி விட முடியும். ஆனாலும், அப்பணியை அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்யவில்லை.

Anbumani questioned why TNPSC Group 2 exam results have not been released for 9 months KAK

வெளியிட முடியாமல் திணறுவது ஏன்.?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 பணிகளுக்கு முதன்மைத் தேர்வு நடத்தி 7 மாதங்கள் கழித்து கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தான், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை நடத்தியது. அந்தத் தேர்வுகளில் 14,624 தேர்வர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் 9 தாள்களை எழுதினார்கள். அதன்படி, மொத்தம் 1 லட்சத்து 34,616 தாள்கள் திருத்தப்பட வேண்டும். அந்த தாள்கள் மொத்தம் 4 வகையானவை. அனைத்துத் தாள்களையும் அக்டோபர் மாதத்தில் திருத்தி கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முடிவை அறிவித்திருக்கிறது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஆனால், அதைவிட குறைவான பணிச்சுமை கொண்ட   தொகுதி 2 முதன்மைத் தேர்வுகளின் முடிவுகளை 9 மாதங்களாகியும் வெளியிட முடியாமல் திணறிக்  கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். 

இதிலிருந்தே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாட்டு வேகத்தை மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும். முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல... தேர்வுகளை நடத்துவதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் அதன் செயல்திறன் இன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை பொழுதுபோக்குக்காக எழுதுவதில்லை. அதில் தான் தங்களின் எதிர்காலம் இருப்பதை உணர்ந்து பல ஆண்டுகள் உழைத்து தேர்வுக்கு தயாராகின்றனர். அந்தத் தேர்வுகளை நடத்துவதிலும், முடிவுகளை வெளியிடுவதிலும் செய்யப்படும் தாமதமும், குளறுபடிகளும் தேர்வர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.

Anbumani questioned why TNPSC Group 2 exam results have not been released for 9 months KAK

6 மாதங்களில் முடிவு வெளியிடுக

இந்தியாவின் மிகக் கடுமையான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எந்தக் குழப்பமுமின்றி 10 மாதங்களில் நடத்தி முடிவை வெளியிடுகிறது. ஆனால், நான்காம் தொகுதி   தேர்வுகளை நடத்தி முடிக்க இரு ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம், அறிவிக்கப்பட்டு 21 மாதங்களாகியும் தொகுதி 2 தேர்வு நடைமுறைகளை முடிக்க வில்லை. கண்ணுக்குத் தெரியக் கூடிய இக்குறைகளை ஆணையம் சரி செய்து கொள்ள வேண்டும்.

தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொகுதி 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி,  இனிவரும் காலங்களில், தொகுதி 1, தொகுதி 2, 2ஏ ஆகிய தேர்வுகளை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 10 மாதங்களுக்குள்ளாகவும், பிற தேர்வுகளை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களிலும் நடத்தி முடித்து, முடிவுகளை வெளியிட பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்பாரா? ராஜினாமா செய்வாரா? இறங்கி அடிக்கும் நாராயணன் திருப்பதி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios