Asianet News TamilAsianet News Tamil

சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? அரசுக்கு எதிராக சீறும் அன்புமணி

 ஒரே பணியை செய்யும் இருதரப்பு இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது என தெரிவித்துள்ள அன்புமணி, தங்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது அதைவிடக் கொடுமையாக அநீதியாகும் என தெரிவித்துள்ளார்.

Anbumani condemned the arrest of teachers who protested for equal pay for equal work KAK
Author
First Published Feb 21, 2024, 10:15 AM IST | Last Updated Feb 21, 2024, 10:15 AM IST

சம வேலைக்கு சம ஊதியம்

தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம்  தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது.

31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009க்கு பிறகு  நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப் படுகிறது. 

Anbumani condemned the arrest of teachers who protested for equal pay for equal work KAK

ஆசிரியர்களுக்கு ஊதிய வேறுபாடு

அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.4100 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. ஒரே பணியை செய்யும் இருதரப்பு இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது. ஊதிய முரண்பாடு 15 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அதற்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 19ஆம் தேதி முதல், பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் முதல் நாளான 19ஆம் நாள் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை காவல்துறை  கைது செய்தது.

Anbumani condemned the arrest of teachers who protested for equal pay for equal work KAK

திமுக தேர்தல் வாக்குறுதி

தொடர்ந்து 20ஆம் தேதியான நேற்று மீண்டும்  போராட்டம் நடத்திய போதும் அவர்களை காவல்துறை கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தது. நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கைது செய்து கொடுமைக்குள்ளாவதை நியாயப்படுத்தவே முடியாது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின்  ஊதிய முரண்பாடு களையப்படும் என்று 311ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய வாக்குறுதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது நியாயமற்றது. இடைநிலை ஆசிரியர்கள் எப்போது போராட்டம் நடத்தினாலும், அதை ஒடுக்குவதே அரசின் கொள்கையாக உள்ளது. 2022 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். 

Anbumani condemned the arrest of teachers who protested for equal pay for equal work KAK

மீண்டும் ஆசிரியர்கள் போராட்டம்

அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களின்  கோரிக்கையை ஏற்பது குறித்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்  என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மாதங்களாகியும் அக்குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அதனால் தான் இடைநிலை ஆசிரியர்கள் இப்போது மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Anbumani condemned the arrest of teachers who protested for equal pay for equal work KAK

ஊதிய கோரிக்கையை நிறைவேற்றிடுக

ஒரே பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு இருவகையான ஊதியம் வழங்குவது பெரும் அநீதியாகும்.  தங்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது அதைவிடக் கொடுமையாக அநீதியாகும். இதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு, இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும்; சமவேலைக்கு சம ஊதியம் என்ற அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

களத்தில் இறங்கிய அதிமுக...நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமா.?விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios