பிரக்ஞானந்தா பெற்றோருக்கு கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா!
செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு கார் பரிசளிக்கவுள்ளதாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்
உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா களம் கண்டார்.
முதல் இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்ததால், வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்கன டை பிரேக்கர் ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனும், பிரக்ஞானந்தாவும் மோதினர். ரேபிட் முறையில் நடைபெற்ற இரண்டு ஆட்டத்தின் முடிவில், உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் வென்றார். அவருக்கு மிகப்பெரும் சவால் கொடுத்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார். உலக ஜாம்பவான்களுடன் மோதி இறுதிப் போட்டி வரை களம் கண்டு போராடி தோல்வியடைந்த பிரக்ஞானந்தாவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த பலரும், மஹிந்திராவின் தார் காரை பிரக்ஞானந்தாவுக்கு பரிசளிக்கலாம் என கோரிக்கை விடுத்தனர்.
இண்டியா கூட்டணி: எனக்கு அதுல விருப்பம் இல்ல - நிதிஷ் குமார் ஒப்பன் டாக்!
இந்த நிலையில், செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி காரை, பரிசாக அளிக்கவுள்ளதாக பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழும தலைவருமான ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரக்ஞானந்தாவுக்கு பலரும் மஹிந்திரா தார் காரை பரிசளிக்க வேண்டும் என கோருகிறார்கள். அவர்களது உணர்வு எனக்கு புரிகிறது. ஆனால், என்னிடம் மற்றொரு யோசனை உள்ளது. வீடியோ கேம்களின் மோகம் அதிகரித்துள்ள போதிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி அவர்கள் இந்த விளையாட்டை தொடர அவர்களுக்கு ஆதரவளிப்பதை ஊக்குவிப்பதை விரும்புகிறேன்.
இது எலெக்ட்ரிக் கார்களைப் போலவே நமது கிரகத்திற்கும் சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடு. எனவே, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி காரை பரிசளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி, ரமேஷ்பாபு ஆகியோர் தங்கள் மகனின் ஆர்வத்தை வளர்த்ததற்காகவும், அயராத ஆதரவை வழங்கியதற்காகவும் அவர்கள் நம் நன்றிக்கு உரியவர்கள்.” என பதிவிட்டுள்ளார்.