இண்டியா கூட்டணி: எனக்கு அதுல விருப்பம் இல்ல - நிதிஷ் குமார் ஒப்பன் டாக்!
இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்
பாஜக எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும் நடைபெற்று முடிந்துள்ளது. மூன்றாவது கூட்டம் வருகிற 31ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஏற்கனவே 26 கட்சிகள் உள்ள நிலையில், மேலும் சில கட்சிகள் மும்பை கூட்டத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இண்டியா என பெயரிடப்பட்டுள்ள நிலையில், மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலான கிராண்ட் ஹயாட்டில் நடைபெறவுள்ள இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில், கூட்டணியின் புதிய லோகோ வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் செப்.15 வரை நீடிப்பு: ஜாமீனுக்கு என்ன செய்ய வேண்டும்?
இந்த நிலையில், இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். மும்பை கூட்டத்துக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றி வரும் ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், “கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராவதற்கு எனக்கு தனிப்பட்ட விருப்பம் இல்லை. அந்த பதவிக்கு வேறு நபர்கள் நியமிக்கப்படுவார்கள்.” என்றார்.
‘2024 லோக்சபா தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து; அனைவரும் ஒன்றாக போட்டியிடுவதை மட்டுமே நான் விரும்புகிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, மேலும் சில அரசியல் கட்சிகள் இண்டியா கூட்டணியில் இணையவுள்ளதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார். தேர்தலுக்கு முன் அதிகபட்ச கட்சிகளை ஒன்றிணைக்க விரும்புகிறேன். அதனை நோக்கி பயணித்து வருகிறேன். எனக்கு தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.
வடகிழக்கு இந்தியா, கிழக்கு மாநிலங்கள், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து பல கட்சிகள் இண்டியா கூட்டணியில் இணைய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த நிதிஷ்குமார், அந்த குறிப்பிட்ட கட்சிகளின் பெயரை குறிப்பிடவில்லை.