நான் தான் திருடன் பேசுகிறேன்...திருடிய போனுக்கு காசு தாங்க, சாப்பாடு வாங்கி வாங்க.. பேரம் பேசிய காமெடி ஆடியோ
4 செல்போனை திருடிய திருடன், போனை திருப்பி கொடுக்க 15 ஆயிரம் ரூபாயும், சாப்பாடும் வாங்கி வர வேண்டும் என பேரம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் திருட்டு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழைப்பெருமாள், விவசாயியான இவர், தனது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டு உள்ளார். அதனை மர்ம நபர் ஒருவர் திருடி சென்ற நிலையில், அடுத்த நாள் காலையிலிருந்து திருடு போன செல்போனில் இருந்து ஏழைப் பெருமாள் மனைவியின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஒருவர், நான் தான் திருடன் பேசுறேன்.. உங்க 4 போனை நான் தான் எடுத்து சென்றேன். நான் திருட்டு பய தான். பணம் கிடைத்தால் பணம் எடுப்பேன், செல் போன் கிடைத்தால் செல்போன் எடுப்பேன், எனவே எனக்கு பணம் தேவை. 4 போன் இருக்கு 15ஆயிரம் கொடுங்கள் செல்போனை கொடுத்து விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.
திருடிய செல்போனுக்கு பேரம் பேசிய திருடன்
இதற்கு எதிர் முனையில் உள்ளவர், என்னால் அவ்வளவு கொடுக்க முடியாது 2ஆயிரம் 3 ஆயிரம் தான் முடியும் என கூறுகிறார். இதனையடுத்து திருடன் கூறுகையில், கடைக்கு போய் புதிய போன் வாங்க வேண்டும் என்றால், முழுவிலையும் கொடுத்து போன் வாங்க வேண்டும். எனவே 15 ஆயிரம் கொடுங்கள், அப்படியே வரும் பொழுது ஓட்டலில் சாப்பாடு வாங்கி வாருங்கள் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய திருடன், உங்களுக்கு செல்போன் வேண்டும் என்றால் பணம் கொடுங்க.. போலீசுக்கு போகாதீங்க, போலீசுக்கு போனாலும் எந்த வித பயனும் இல்லை, போலீஸ் என்னைய விட மோசமானவங்க, என்னிடம் எதாவது வாங்கிட்டு விட்டுருவாங்க,
சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்
மேலும் உங்கள் ஊர் அருகில் உள்ள ஒரு இடத்திலும் செல்போனை திருடிவிட்டு வந்துட்டேன், அவர்களையும் என்னை தொடர்பு செய்ய சொல்லுங்கள் என கூறுகிறான். மேலும் விடிவதற்குள் வந்தால் தான் தருவேன், காலையில் போனை எடுக்க மாட்டேன் என கூறியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஏழை பெருமாள் போலீசிடம் திருடன் தொலைபேசியில் பேசியது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கரும்பு தோட்டத்திற்கு திருடன் அய்யனாரை வரவழைத்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்தநிலையில் செல்போனுக்காக பேரம் பேசிய திருடன் அய்யனாரின் ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்
பெண் குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த இளைஞர்.. அலறிய பெண்.. இறுதியில் நடந்தது என்ன?