Asianet News TamilAsianet News Tamil

இலவச வைஃபை வசதியை பயன்படுத்தி தமிழகத்தின் முதல் டிஜிட்டல் கிராமமாக மாறிய அம்மனூர்...

Ammunur who became the first digital village in Tamil Nadu using WiFi facility
Ammunur who became the first digital village in Tamil Nadu using WiFi facility
Author
First Published Nov 24, 2017, 9:38 AM IST


காஞ்சிபுரம்

இலவச வைஃபை வசதியை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி தமிழகத்தின் முதல் டிஜிட்டல் கிராமமாக மாறியுள்ளது அம்மனூர் கிராமம்.

காஞ்சிபுரம் மாவட்டம், அம்மனூர் கிராமத்தில் இலவச வைஃபை வசதியை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் முதல் டிஜிட்டல் கிராமமாக மலர்ந்துள்ளது.

பி.எஸ்.என்.எல் முயற்சியில், மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி இலவச வைஃபை  வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அந்த வசதி மூலம் விவசாய இடுபொருள்களின் விலை விவரம், மின்கட்டணம், வானிலை அறிக்கை, விவசாயம் தொடர்பான தகவல்கள், வேளாண் தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து வருகின்றனர்.

இதன் மூலம், அம்மனூர் கிராம விவசாயிகள் பிற கிராம விவசாயிகளுக்கு முன்மாதிரியாக மலரத் தொடங்கியுள்ளனர். இக்கிராமத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம், தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து வை ஃபை வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக மாநிலங்களை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார்.  அத்துடன் அம்மனூரில் பைபர் ஆப்டிக் கேபிள் (கண்ணாடி இழை கம்பி வடம்) அமைத்துக் கொடுக்க சென்னை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் எஸ்.எம். கலாவதி முன்வந்தார்.

அதைத் தொடர்ந்து அம்மனூரில் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த வசதியை கிராமத்தைச் சுற்றிலும் 3 கி.மீட்டர் தூரத்துக்கு பயன்படுத்தும் வகையில் தனியார் நிறுவனம் நான்கு இடங்களில் நவீன கருவியை பொருத்தியுள்ளது.

கிராமத்தில் ஸ்மார்ட்போன் உள்ள எவரும் இந்த வசதியைப் பயன்படுத்த முடிகிறது. ஒரே நேரத்தில் 200 பேர் இந்த வசதியைப் பெறும் வகையில் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் 400 மெகாபைட் வரை பதிவிறக்கம் செய்ய முடியும். அத்துடன் 24 மணி நேரமும் இந்த வசதியை கிராமத்தினர் பயன்படுத்த முடியும்.

அம்மனூர் கிராமத்திற்குச் செல்லும் எவரும் தங்களின் ஸ்மார்ட் போனில் உள்ள வை ஃபை குறியீட்டை ஆன் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கடவுச் சொல்லில் தங்களின் செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்தால் போதும் உடனடியாக வைஃபை வசதி கிடைக்கத் தொடங்கிவிடும்.

அம்மனூர் கிராமத்தில் 3,000 பேர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆண்டு முழுவதும் வை ஃபை வசதியைப் பெற முடியும். இந்த வசதியை தொடங்கிய முதல் வாரத்தில் 350 பேர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அக்டோபர் இறுதியில் இதன் எண்ணிக்கை 1000-ஐ கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடிய விரைவில் கிராமத்தினர் அனைவருமே இந்த வசதியைப் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

"இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்துதல், ரயில், பேருந்து பயணத்துக்கு முன்பதிவு செய்தல், விவசாயப் பொருள்களுக்கு நேரடியாக விலை நிர்ணயம் செய்தல், வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்கள், வானிலை நிலவரம் உள்ளிட்ட தேவைகளுக்கு இந்த வசதி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர கல்வி தொடர்பான தகவல்கள், அன்றாட நிகழ்வுகள் குறித்த தகவல்களையும் இந்த வசதி மூலம் பெறுகின்றனர்" என்றனர் பிஎஸ்என்எல் அதிகாரிகள்.

Follow Us:
Download App:
  • android
  • ios