ஆம்பூர் அருகே இன்று அதிகாலை நடந்த கார் விபத்தில் அப்பா, மகன் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓசூரைச் சேர்ந்த முனிர் அலிகான் என்பவர் ஹஜ் பயணம் சென்று திரும்பினார். 

முனிர் அலிகானை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக அவரது உறவினர்கள் காரில் சென்றுள்ளனர். முனிர் அலிகானை அழைத்துக் கொண்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

 

 வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. 
அப்போது கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்த்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முனிர் அலிகான், அவரது மகன் முகமது அப்பாஸ் அலிகான், அவருடைய உறவினர் ஜீபேர் அலிகான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

தர்மபுரியைச் சேந்த அப்துல் ரகுமான், பலத்த காயங்களுடன் ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.