Ambulance 108 killed in clashes with lightning speed Two palattakayam

குடியாத்தம்

குடியாத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள் மீது 108 அவசர ஊர்தி மின்னல் வேகத்தில் மோதியதில் ஒருவர் பலியானார். இருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குடியாத்தத்தை அடுத்த வேப்பூர் காலனியில் வசிப்பவர் ஆட்டோ டிரைவர் சிவக்குமார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இளைய மகன் நரசிம்மன் (18) குடியாத்தம் இரயில் நிலையம் அருகேயுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது அவர் பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

பள்ளிக்கொண்டாவை அடுத்த வெட்டுவானம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நடராஜன். இவரது மகன் நவீன் (17). நாகராஜன் மகன் ஆகாஷ் (17). ஆகியோரும் அதே பள்ளியில் படித்து வருகின்றனர். மூன்று பேரும் நண்பர்கள்.

நேற்று காலையில் பள்ளிக்குச் செல்வதற்காக நவீன், ஆகாஷ் ஒரே மோட்டார் சைக்கிளில் செல்லும் வழியில் வேப்பூரில் நரசிம்மன் அதே மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார்.

அது ஒருபக்க இருக்க, மறுபக்கம் அகரம்சேரி அருகே ஆம்பூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற தீபா பேரவையினர் வாகனம் கவிழ்ந்த விபத்துகுள்ளானது. இதில், காயம் அடைந்தவர்களை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு பள்ளிகொண்டா நோக்கி அரசு அவசரஊர்தி 108 சென்றுக் கொண்டிருந்தது.

வேப்பூர் அருகே அவசர ஊர்தி வந்துக் கொண்டிருந்தபோது திடீரென மாணவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மின்னல் வேகத்தில் மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி எரியப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மாணவர்களை மீட்டுச் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து நரசிம்மன் மட்டும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் இருதயராஜ், உதவி ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவசர ஊர்தி 108 மோதி, தனது நண்பர் பலியான சோகம் மற்ற நண்பர்களை வலுவாக பாதித்தது. நரசிம்மனின் பெற்றோரும் சோகத்தில் மூழ்கினர்.