Asianet News TamilAsianet News Tamil

TN school education Department: அரசு பள்ளிகளுக்கு குட் நியூஸ்.. லிஸ்ட் போட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வழிகாட்டுதலும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024-25ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. 

Allocation of funds to keep toilets clean in Tamilnadu government schools  tvk
Author
First Published Jul 3, 2024, 9:31 AM IST

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விவரத்தை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வழிகாட்டுதலும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024-25ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக 50 சதவீத தொகையை அனைத்து அரசு பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மானிய தொகையில் முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்யப்பட வேண்டியவை: 

* ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள Tabletகளுக்கு தேவையான SIMமிற்கான ஜூலை முதல் மார்ச் மாதத்திற்கான தொகையினை மட்டும் 110‌ ரூபாய்க்கு ஒரு டேபிற்கு பள்ளி மானியத்திலிருந்து மேற்கொள்ளுதல் வேண்டும்.

* மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கை கழுவும் வசதி மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கிடல் வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் சோப்பு மற்றும் கிருமிநாசினி துப்புரவு செய்ய பயன்படும் பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் தேவையான அளவில் இருப்பில் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும். 

* பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து, சுத்திகரிப்பு பணி தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும்.

* பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10 சதவீதம் முழு சுகாதார செயல்திட்ட இடங்களான பள்ளி வகுப்பறை மற்றும் வளாகத் தூய்மை, சுகாதாரமாக பராமரித்தல், கை கழுவும் வசதி ஏற்படுத்துதல், தூய்மையான குடிநீர், மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் நடத்தை மாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு செலவிட வேண்டும். குறிப்பாக கழிப்பறையைச் சுத்தம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து, பயன்படுத்துதல் வேண்டும். அந்த வகையில் பள்ளிகளில் 30 மாணவர்கள் இருந்தால் ஆயிரம் ரூபாயும், 100 மாணவர்கள் வரை இருந்தால் 2500 ரூபாயும், 250 மாணவர்கள் வரையில் இருந்தால் ஐந்தாயிரம் ரூபாயும், ஆயிரம் மாணவர்கள் இருந்தால் 7500, ஆயிரம் மாணவர்களுக்கு மேல் இருந்தால் பத்தாயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 30 மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், 100 மாணவர்களுக்கு 25 ஆயிரம், 250 மாணவர்களுக்கு 50 ஆயிரம், 1000 மாணவர்களுக்கு 75 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் இருந்தால் ஒரு லட்சமும் பள்ளி மானிய நிதியாக வழங்கப்பட்டுள்ளது. 

* மாணவர்கள் முறையாக கழிப்பறைகளை பயன்படுத்துவதை உறுதி செய்தல் வேண்டும்.

* கழிவறைகளை சுத்தம் செய்ய தேவையான பொருட்களை வாங்குதல் வேண்டும். 

* தினமும் கழிவறைகளை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்வதை உறுதி செய்தல் வேண்டும். 

* குறைந்த எண்ணிக்கையிலான கழிவறைகள் இருந்தால் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வேண்டும்.

* கழிவறைகளில் கழிவு நீர்த்தொட்டி பழுது பார்த்தல் மற்றும் சுத்தம் செய்தல், தண்ணீர் வசதிக்கான குழாய்கள் பழுது பார்த்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயிலும் பள்ளியில் இருக்கும் அனைத்து கழிவறைகளில் குறைந்தபட்சம் ஒரு கழிவறையை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் விதமாக கைப்பிடிகள், தரை ஒடுகள், கழிப்பறை கோப்பைகள், மற்றும் விவரப் பலகைகள் அல்லது குறியீடுகள் அமைத்து பயன்படுத்த வேண்டும்.

* ஆசிரியர்கள் தலைமையில் பெற்றோர்கள் அடங்கிய குழுவானது கழிவறைகள் சுத்தமாக இருப்பதையும், தண்ணீர் வசதி தொடர்ந்து கிடைப்பதையும் கண்காணிக்க வேண்டும். 

* கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு வாங்கப்பட்ட பொருட்களை தினமும் பயன்படுத்துவதையும் உறுதி செய்தல் வேண்டும். 

* இதற்காக ஒரு ஆசிரியர் தலைமையிலான குழுவினை அமைத்து பார்வையிட்டு பதிவேட்டில் தினமும் பதிவு செய்ய வேண்டும், குறைகள் இருப்பின் அதனையும் சுட்டிக் காட்டுதல் வேண்டும். இதனை ஒவ்வொரு நாளும் பள்ளி தலைமையாசிரியர் பார்வையிட்டு கையொப்பமிட வேண்டும்.

* மாணவர்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து மாதம் ஒருமுறை விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல் வேண்டும். மேலும் பள்ளி தலைமையாசிரியர் வாரம் ஒருமுறை காலை வழிபாட்டில் இதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

* பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள உபகரணங்களை மாற்றவும், பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான மின் கட்டணம், இணையம், ஆய்வக உபகரணம், குடிநீர், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் போன்றவற்றிற்கு இந்நிதியினை பயன்படுத்துதல் வேண்டும்.

*அரசு பள்ளிக் கட்டடங்களின் கட்டமைப்பு வசதிகளான சுற்றுச்சுவர், வகுப்பறை, கழிவறை குடிநீர் ஆகியவற்றை சமுதாய பங்களிப்புடன் பராமரிக்கவும், பழுது பார்க்கவும் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தினை ஊக்குவித்திட இந்நிதியினை பயன்படுத்துதல் வேண்டும்.

* டோனர் நிரப்புவதற்கான செலவினத்தை மேற்கொள்ளலாம். 

* கிராமப் பஞ்சாயத்திற்குட்பட்ட பள்ளிகளில் பள்ளித் தூய்மைப் பணியாளர் ஊதியம் மற்றும் தூய்மைப் பொருட்களுக்கான தொகை பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து பெறப்பட்டிருப்பின் அதுசார்ந்த செலவினம் பள்ளி மானியத்திலிருந்தும் மேற்கொள்ளப்படக்கூடாது. 

* மின் கட்டணத்திற்கான தொகை வேறு துறை மூலமாகவோ அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் பிற உட்கூறு மூலமாகவோ பெறப்படின் அச்செலவினத்தை பள்ளி மானியத்தில்  இருந்து மேற்கொள்ளக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios