கடும் குளிரிலும் விடிய விடிய போராட்டம்…போலீசாரின் அடக்குமுறைக்கு அஞ்சாத இளைஞர்கள்…பெண்கள்…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம்…ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தே தீரவேண்டும் என்ற பிடிவாதம்..கடும் குளிரிலும் அஞ்சாத நெஞ்சுரம்.. என அலங்காநல்லுாரை தகிக்க வைக்கின்றனர் இளைஞர்கள்..

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த 10 நாட்களாக இளைஞர்கள், மாணவ,மாணவிகள், பெண்கள் என தன்னெழுச்சியாக திரண்ட இவர்கள் போராட்டம் தமிழகத்தையே புரட்டிப் போட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று காலை 7 மணி முதல் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

]

மதுரை சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது சென்னை, கோவை, திருச்சி, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்ட இளைஞர்கள் வாடிவாசல் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர், ஊர்வலமாக சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும்,பீட்டா அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் அவர்கள் ‛வாடிவாசலில் இருந்து காளைகள் வெளியேறாமல் இங்கிருந்து கலைந்து போக மாட்டோம்' என உறுதியாக உள்ளனர்.

22 மணி நேரத்திற்கு மேலாக இளைஞர்களின் இந்த போராட்டம் தொடர்கிறது. உள்ளூர் மக்களும் ஆதரவு தந்து இளைஞர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். போலீசார் அவர்களுக்கு தண்ணீர் பாக்கெட் விநியோகம் செய்வதற்கு கூட அனுமதி அளிக்கவில்லை. அதையும் மீறி உள்ளூர் மக்கள் போராட்ட இளைஞர்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.

சென்னையில் ஐ.டி நிறுவனங்களில் பணி புரியும் நுற்றுக்கணக்கான பெண்கள் குடும்பத்தினருட்ன் போராடி வருகின்றனர்.சொகுசாக வாழும் இவர்கள் தற்போது கிராம மக்கள் தந்த உரச்சாக்குகளை போர்த்திக் கொண்டும் தீ மூட்டி அதன் அருகில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

.இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வாடிவாசல் முன் அமர்ந்துள்ளனர். பலர் உணவு, நீர் இன்றி மயக்கம் அடைந்தனர். அலங்காநல்லுார் வாடிவாசல் பகுதியில் ஜாமர் பொருத்தப்பட்டுள்ளதால் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரியும், ‛பீட்டா' அமைப்பிற்கு எதிராகவும் இளைஞர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். தற்போது விடிய தொடங்கியுள்ளதால் போராட்டத்தில் பங்கேற்க ஏராளமான இளைஞர்கள் அலங்காநல்லுார் நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து வருகின்றனர். அதையும் மீறி வெவ்வேறு வழிகளில் போராட்ட களம் நோக்கி திரண்டு வருகின்றனர்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும் வரை இந்த போராட்டத்தில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என நெஞ்சில் உறுதியுடன் இந்த இளைஞர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.