ஆர்.டி.ஓ.க்களின் சொத்து விவரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.  மின்னணு ஓட்டுநர் தேர்வு முறையை கைவிடக்கோரி சென்னை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அவர்களின்  கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தகுதியில்லாதவர்களுக்கு உரிமம் வழங்கப்படுவதால் விபத்துகள் அதிகரிப்பதாக கூறினார். விபத்துகளை தடுக்க மின்னணு ஓட்டுநர் பயிற்சி முறை அவசியம் என்றும் நீதிபதி தெரிவித்தார். இடைத்தரகர்களும் ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்களுக்கும் லஞ்சம் கொடுத்து ஓட்டுநர் உரிமம் வாங்குவதால் விபத்துகள்  அதிகரிப்பதாக கூறிய நீதிபதி, அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் 3 மாதங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்  என ஆணையிட்டார். 

அவசியமின்றி ஆர்.டி.ஓ. அலுவலங்களில் இடைத்தரகர்கள் நுழையக்கூடாது என்றும் நீதிபதி  எஸ்.எம்.சுப்பிரமணியம் தனது உத்தரவில் குறிப்பட்டிருக்கிறார். பணியில் சேர்ந்த போதும், தற்போதும் ஆர்.டி.ஓ.க்களுக்கு உள்ள சொத்து மதிப்பை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதி, சொத்து மதிப்பு அதிகமாக இருந்தால் விளக்கம் கேட்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார்.