All drinking water connections to Thoothukudi Sterlite plant should be disconnected
தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து குடிநீர் இணைப்புகளையும் உடனடியாக துண்டிக்க வேண்டும் என்று குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் அ.ம.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் கட்சியினர் நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்துக்கு வந்தனர்.
அங்கு, "ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் வழங்க கூடாது" என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மனு கொடுப்பதற்காக குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு செயற்பொறியாளர் இல்லாததால் அ.ம.மு.க.வினர் அலுவலகத்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு உதவி செயற்பொறியாளர் கென்னடியிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக புற்றுநோய், தோல் நோய், சுவாசக்கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது இந்த ஆலையை இயக்குவதற்கான அனுமதியை மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்கவில்லை. இதனால் ஆலையை இயக்க முடியாது.
இந்த நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு பல இலட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படுகிறது. தற்போது ஆலை இயங்காத நிலையில் இருப்பதால், தண்ணீர் வழங்க கூடாது.
இந்த கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ள அனைத்து குடிநீர் இணைப்புகளையும் உடனடியாக துண்டிக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
