alcohol sale in Burglary Abusing students students petition to collector
நாமக்கல்
நாமக்கல்லில் கள்ளத்தனமாக சாராயம் விற்கப்படுவதால், மாணவிகளிடம் குடிகாரர்கள் அத்துமீறுகிறார்கள் என்றும் சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே உள்ள சௌரிபாளையத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் நேற்று ஆட்சியர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவர்கள் ஆட்சியர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், "சௌரிபாளையம் கிராமத்தில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
இந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள வெண்ணந்தூருக்கு சுமார் 30 குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். பள்ளிக்குச் செல்லும் வழியில் கோவில் சுற்றுச்சுவர் அருகே கள்ளத்தனமாக சாராயம் விற்கப்படுகிறது.
சாராயம் குடிக்க வருபவர்கள் பள்ளிக்குச் சென்றுவரும் மாணவிகளிடம் அத்துமீறுகின்றனர். இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது. எனவே, கோவில் அருகில் கள்ளத்தனமாக நடைபெறும் சாராய விற்பனையை தடுக்க வேண்டும்.
மேலும், மாணவிகளிடம் அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குழந்தைகள் தொடந்து படிக்க உதவ வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு உறுதியளித்தார்.
