alcohol drinkers siege to polic officers

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வெங்கல் பஜார் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி அந்த கடை அகற்றப்பட்டது. அதன்பின்னர், பல்வேறு பகுதிகளில் அந்த கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பால், முடியாமல் போனது.

இதையடுத்து வெங்கல் அருகே சீத்தஞ்சேரி பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்தில் டாஸ்மாக் கடைக்கான கட்டிடம் கட்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருகில் உள்ள காலனி பெண்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, கடை திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் கடையை திறக்க மீண்டும் அதிகாரிகள் வந்தனர். அதை அறிந்த பெண்கள்,

அங்கு திரண்டு சமையல் செய்யும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் சமரசம் பேசிய, பெரியபாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, கடை திறக்காது என உறுதியளித்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் டாஸ்மாக் கடைக்கு லாரிகள் மூலம் மதுபாட்டில்கள் வந்து இறங்கின. இதை அறிந்த பெண்கள், அங்கு சென்று மீண்டும் போராட்டம் நடத்தினர்.

கடையை திறக்க கூடாது என முற்றுகையிட்டு, கண்டன கோஷமிட்டனர். இதனால், மீண்டும் அங்கு இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீசார் அங்கு சென்று சமரசம் பேசினர். இதையடுத்து கடைக்கு பூட்டு போடப்பட்டது.

திறக்கப்பட்ட சில நிமிடங்களில் டாஸ்மாக் கடை மூடியதால், குடிமகன்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.

இதையொட்டி சுமார் 100க்கு மேற்பட்ட குடிமகன்கள் அங்கு திரண்டனர். கடையை திறக்கக்கோரி போராட்டம் நடத்தினர்.

சிலர் சாலை படுத்து கொண்டு கடையை திறந்தால்தான், நாங்கள் எழுந்து செல்வோம் என்றனர்.

சிலர் போலீசாரின் ஜீப் முன்பு படுத்து கொண்டு, கடையை திறந்து வையுங்கள், இல்லாவிட்டால் உங்கள் வாகனத்தை ஏற்றி கொன்றுவிடுங்கள் என கூச்சலிட்டனர்.

குடிமகன்கள் சிலர், இன்ஸ்பெக்டரின் காலில் விழுந்து, கடையை திறக்கும்படி போராட்டம் நடத்தினர். இதனால், போலீசார் செய்வதறியாமல் தவித்தனர். பின்னர், கடையை திறந்து வைத்த போலீசார், அங்கிருந்து புறப்பட்டால் போதும் என திரும்பி பார்க்காமல் சென்றனர்.

கடையை திறந்ததும், குடிமகன்கள், தங்களுக்கு தேவையான சரக்குகளை வாங்கி கொண்டு, நடுரோட்டில் குத்தாட்டம் போட்டனர். இதனால், நேற்று மதியம் முதல் மாலை வரை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.