திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலில் பணியாற்றி வந்த அஜித் குமார் என்ற இளைஞர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் அஜித் குமார் என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பெண் பக்தர் அளித்த நகை திருட்டு புகாரின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் அக்கோவிலில் தற்காலிக காவலராக பணியாற்றி வந்த அஜித் குமார் என்ற இளைஞரை, திருபுவனம் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். காவல்துறை கடமையாக தாக்கியதால் அஜித்குமார்உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

சிபிசிஐடி போலீசார் விசாரணை

இதனையடுத்து அஜித்குமார் மரணத்துக்கு காரணமானவர்களாக கூறப்படும் 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் 6 போலீசாரையும் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம், சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கை

இந்நிலையில் அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று இரவு வெளியானது. அதில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் கண்டறியப்பட்டதாகவும், வலது கை மூட்டுக்கு மேலேயும், வலது கை மணிக்கட்டுக்கு கீழேயும் சிராய்ப்பு காயங்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் தவறி விழுந்தபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை அறிக்கை

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: சிவகங்கை மாவட்டத்தில் ஜூன் 28ம் தேதியன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, ஆறு காவல் ஆளிநர்கள் உடனடியாக அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்று இரவு கிடைத்தவுடன் எந்த காலதாமதமும் இன்றி, உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

5 போலீஸ் கைது

இந்த வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், இவ்வழக்கை கொலை வழக்காக சட்டப்பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து காவல் ஆளிநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் Bharatiya Nagarik SurakshaSanhita (BNSS) Act ன் பிரிவு எண். 196(2)(a) ன் கீழ், குற்ற எண். 303/2025 ல் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு, நீதி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்கள் குறைவு

இந்த வருந்தத்தக்க சம்பவத்தில், தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கடந்தகாலங்களை ஒப்பிடும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க திருப்புவனம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.