aircel maksis case in appeal to delhi high court by enforcement directorate
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் இருந்து தயாநிதி, கலாநிதி ஆகியோரை விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசிய நிறுவனமான மேக்சிஸ் என்ற நிறுவனத்திற்கு விற்க செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து கடந்த 2011 ஆம் ஆண்டு சிவசங்கரன் சிபிஐயில் புகார் செய்தார். இதையடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடகியது.
மேலும் மேக்சிஸ் நிறுவனம் சார்பில் சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட், சவுத் ஏசியா எப்.எம். லிமிடெட் நிறுவனங்களுக்கு மொரிஷியஸ் வாயிலாக ரூ.742.58 கோடி கைமாறியிருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.
ஊழல் தொடர்பான குற்றச் சாட்டுகள் குறித்து சிபிஐ அமைப்பும் பண மோசடி குறித்து அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தின.இரு வழக்குகளிலும் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு பல நாட்களாக இழுத்து அடிக்கப்பட்டு வந்தது. இதைதொடர்ந்து 2 வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாகவும், வழக்குகளில் தொடர்புடைய நிறுவனங்களும் விடுவிக்கப்படுவதாகவும் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
