கடலுார்
கடலுார் மாவட்டத்தில் அதிமுகவின் வார்டு, கிளை, நகரம், ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாக ஒபிஎஸ் பக்கம் செல்கின்றனர். சசிகலா தரப்பு அதிமுகவினர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலா, கட்சி மற்றும் ஆட்சியில் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு அதிமுகவின் பொதுச் செயலரானார்.
அதனை கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏற்க மறுத்தும், எதிர்ப்பு தெரிவித்தும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சி தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்த எதிர்ப்பு, கடலுார் மாவட்டத்தில் சற்று அதிகமாகவே உள்ளது.
கட்சியின் முன்னாள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலரும், தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து வருவதால், கடலூரில் தீபாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
தாங்கள் வகித்து வரும் பதவிக்கு ஆபத்து வராத வகையில் கட்சியின் வார்டு, கிளை, நகரம், ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் மறைமுகமாக தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இதனைத் தடுக்க அதிமுக நிர்வாகிகள் பல்வேறு வகையிலும் தடை ஏற்படுத்தி வந்தனர். அதனையும் மீறி தீபா ஆதரவாளர்கள் தொடர்ந்து சசிகலாவிற்கு தங்கள் எதிர்ப்பை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், சசிகலாவுடன் இருந்த முதல்வர் பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி இரவு ஜெயலலிதாவின் சமாதி முன் தனது மௌனத்தைக் கலைத்தார்.
அப்போது கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா தீட்டி வரும் சதித் திட்டங்களை போட்டுடைத்ததோடு, ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவைக் காத்திட தனி ஆளாக நின்று போராடவும் தயார் என சூளுரைத்தார்.
முதல்வரின் இந்த அதிரடி முடிவை, கடலுார் மாவட்ட தீபா ஆதரவாளர்கள் வரவேற்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அதிமுகவின் வார்டு, கிளை நிர்வாகிகள், மாஜி உள்ளாட்சி பிரதிநிதிகள் பகிரங்கமாக ஒபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அவர்களை, அதிமுக நிர்வாகிகள் தடுத்து வைத்து வந்தனர். ஆனால், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருவதைத் தொடர்ந்து நிர்வாகிகளின் தடைகளை மீறி நேரடியாக ஒபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்க கூட்டம் கூட்டமாக திரள்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு வகையில் தொண்டர்களை கட்டுப்படுத்தி வந்த அ.தி.மு.க., நிர்வாகிகள், தற்போது அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், மாவட்ட செயலருக்கு பதில் கூற முடியாமல் தவித்து வருகின்றனர்.
