Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் பத்திரம் ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு!

தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை அதிமுக வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

AIADMK welcomes supreme court verdict to cancel electoral bond scheme says edappadi palanisamy smp
Author
First Published Feb 15, 2024, 3:15 PM IST | Last Updated Feb 15, 2024, 3:16 PM IST

தேர்தல் பத்திரம் திட்டத்தை கடந்த 2017-18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பாஜக அறிவித்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2018ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி, ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. அவை பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே கிடைக்கும். ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

இந்த தேர்தல் பத்திரங்களை தனி நபர்கள், நிறுவனங்கள் வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும். தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனி நபர், நிறுவனங்கள் யார் என்ற விவரங்கள் பொதுமக்களுக்கோ அல்லது நன்கொடையை பெறும் அரசியல் கட்சிக்கு அளிக்கப்படாது. ஆனால், அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம். பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

இத்தகைய தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி, “தேர்தல் பத்திரம் முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. அரசை கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. தேர்தல் பத்திரம் நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் தேர்தல் பத்திரம் திட்டம் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கருப்பு பணத்தை தடுக்க தேர்தல் பத்திரங்களை அனுமதிக்கிறோம் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. எனவே, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை மார்ச் 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் களம் காணும் ஏழு மத்திய அமைச்சர்கள் யார்?

 

 

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை அதிமுக வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரம் ரத்து என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அஇஅதிமுக நிச்சயமாக வரவேற்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிமுக பெற்ற நன்கொடை ரூ.6 கோடி என தெரியவந்துள்ளது.

 

 

முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டு மக்கள் தான் எங்களின் எஜமானர்கள். தமிழக மக்கள் எங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறார்கள். இங்கு இருக்கின்ற மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க  வேண்டும். அதற்காக தான் நாங்கள் கட்சி நடத்துகின்றோம். மற்றவர்களை போல அதிகாரத்துக்காகவும், யாரிடமும் அடிபணியவும் நாங்கள் கட்சி நடத்தவில்லை.” என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios