டாஸ்மாக் ரெய்டுகளுக்குப் பதிலடியாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிமுகவினர் வீடுகளில் சோதனை நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் ரெய்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி அதிமுகவினர் வீடுகளில் சோதனை நடத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

பா.நீதிபதி, 2016 முதல் 2021 வரை அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் பா.நீதிபதி். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 22வது வார்டு அண்ணா நகரைச் சேர்ந்த இவர் தற்போது உசிலம்பட்டி ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரது வீட்டில் இன்று காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடக்கிறது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினர் வீடுகளில் ரெய்டு நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

"ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதியையும் குறிவைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED ரெய்டுகள் ஸ்டாலின்-க்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது ,பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அஇஅதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார்.

டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து ஸ்டாலின் மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்? பின்னப்பட்ட புனைகதைகளால், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அதிமுக இயக்கத்தை அசைத்து கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொள்வோம்"

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் கூறியுள்ளார்.