2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணி வியூகத்தை வகுத்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
களநிலவரம் 2 நாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க அதிமுக காய் நகர்த்தி வருகிறது. அதன் படி பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.
தனித்தனியாக மாவட்ட செயலாளர்களோடு இபிஎஸ் ஆலோசனை
அடுத்ததாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு ரகசிய பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களோடு ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதன் படி, ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுகவிற்கு சாதக, பாதக நிலை, யாரை வேட்பாளராக நிறுத்தலாம். கட்சியின் வளர்ச்சி பணி, பாஜகவுடன் கூட்டணியால் ஏற்படும் நண்மை மற்றும் பாதிப்பு தொடர்பாக கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
82 மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு
இந்த நிலையில் அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வருகிற மே மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. 29-ம் தேதி காலை மற்றும் மாலை என இரு பிரிவுகளாக 42 மாவட்டங்களுக்கும், இதே போல 30 -ம் தேதி 40 மாவட்டங்களுக்கும் ஆலோசனை நடைபெறும் என தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
