வாடகைக்கு வீடு விட்டிருந்த அதிமுக நிர்வாகி பொன்னம்பலம், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து போலீசார் பொன்னம்பலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை

அதிமுக குன்றத்தூர்மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் பொன்னம்பலம், இவரது வீடு சென்னையை அடுத்த படப்பை பகுதியில் உள்ளது. அங்கு தனது வீட்டை தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவ்வப்போது அந்த பெண்களுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு அந்த பெண்கள் குடியேறியுள்ளனர். இருந்த போதும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்து மீண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தனது சக தோழிகளோடு சேர்ந்து அதிமுக நிர்வாகியை துடைப்பத்தால் அடித்துள்ளார். 

துடைப்பத்தால் அடித்த பெண்கள்

இதனையடுத்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த போலீசார் பொன்னம்பலத்தை கைது செய்த போலீசார் அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவில் இருந்து பொன்னம்பலம் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; 

கட்சியை விட்டு நீக்கிய இபிஎஸ்

கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த M. பொன்னம்பலம், (குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.