அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்ட விரோதம்: தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவித்திருப்பது சட்டவிரோதமானது என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றமும் அதனை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிக்க இசைவு தெரிவித்துள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்துவருகிறார். இந்நிலையில் அக்கட்சியின் புதிய பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யவதற்கான தேர்தலை நடத்தப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியானது. அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யவார்கள். அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 26 அன்று நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம் நாளை (மார்ச் 19) வரை கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார். அவரை போட்டியின்றி தேர்வு செய்ய கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். இதனால் வேறு யாரும் அவரை எதிர்த்து களமிறங்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அறிவித்தபடி தேர்தல் நடக்கும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் ஆகிவிடுவார். அத்துடன் பொதுச்செயலாளர் பதவியின் மூலம் கட்சியின் உறுதியான தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும்.
ஆனால், தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால், நீதிமன்றம் இந்த வழக்கில் என்ன சொல்லப்போகிறது என்பது உற்றுநோக்கப்படும். இதேபோல ஓ. பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தை ஏற்று தேர்தல் ஆணையமும் இந்த விஷயத்தில் தலையிட்டால் திடீர் மாற்றங்கள் நேரவும் வாய்ப்பு இருக்கிறது.
இதனிடையே, ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. அதன்படி ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய ஈபிஎஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஈபிஎஸ் தரப்பின் இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மனோஜ் பாண்டியனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.